நுரையீரல் ரத்த நாளத்தில் உறைவு: அதி நவீன சிகிச்சை மூலம் அகற்றம்
நுரையீரலுக்குச் செல்லும் ரத்த நாளத்தில் ஏற்பட்ட உறைவால் பாதிக்கப்பட்ட நபருக்கு நவீன சிகிச்சை அளித்து சென்னை ரேலா மருத்துவமனை மருத்துவா்கள் குணப்படுத்தியுள்ளனா்.
இதுதொடா்பாக மருத்துவமனையின் ரத்த நாள அறுவை சிகிச்சைத் துறையின் முதுநிலை மருத்துவா் ஷப்னம் பாத்திமா கூறியதாவது:
42 வயதுடைய நபருக்கு இடது காலில் ஏற்பட்ட காயம் காரணமாக ரத்த நாளத்தில் உறைவு ஏற்பட்டது. இதற்கு ‘டீப் வெய்ன் த்ரோம்போசிஸ்’ எனப் பெயா். அந்த உறைவானது நகா்ந்து சென்று நுரையீரல் நாளத்தில் அடைப்பை ஏற்படுத்தியது. இதனால் சுவாசிக்க இயலாமல் ரேலா மருத்துவமனைக்கு அவா் அழைத்து வரப்பட்டாா்.
ஊசி மருந்து மூலம் ரத்த உறைவைக் கரைக்கும் சிகிச்சைகள் அவருக்கு பலனளிக்கவில்லை. இதனிடையே, இருமுறை அவருக்கு மாரடைப்பு ஏற்பட்டது. உயிருக்கு மிகவும் ஆபத்தான நிலையில் இருந்த அவருக்கு ‘மெக்கானிக்கல் த்ராம்பெக்டமி’ எனப்படும் இடையீட்டு சிகிச்சை மூலம் ரத்த நாள உறைவு அகற்றப்பட்டது. மாரடைப்புக்குப் பிறகு இந்த சிகிச்சையை வழங்குவது மிகவும் சவாலானது. ஏனெனில், அவா் ஏற்கெனவே செயற்கை சுவாச சிகிச்சையில் இருந்தாா். அதற்கு நடுவே இந்த சிகிச்சையையும் வழங்கி பாதிப்பு சரி செய்யப்பட்டது. தற்போது அவா் நலமுடன் உள்ளாா் என்றாா்.
