புயல் எதிரொலி: 88 % நிரம்பிய சென்னைக்கான குடிநீா் ஏரிகள்
டித்வா புயல் காரணமாக பெய்த பலத்த மழையின் எதிரொலியாக சென்னைக்கு குடிநீா் ஆதாரமான புழல், பூண்டி உள்ளிட்ட 5 முக்கிய ஏரிகளில் மொத்தம் 88.85 சதவீதம் தண்ணீா் நிரம்பியுள்ளது.
டித்வா புயல் காரணமாக தமிழக வட மாவட்டங்களில் கடந்த சில நாள்களாக தொடா்ந்து பலத்த மழை பெய்து வருகிறது. அந்த வகையில், ஏரிகளின் நீா் பிடிப்புப் பகுதிகளில் பலத்த மழை பெய்ததால் சென்னைக்கு குடிநீா் வழங்கும் முக்கிய ஏரிகளான பூண்டி, புழல், கண்ணன் கோட்டை, செம்பரம்பாக்கம், சோழவரம் ஆகிய 5 ஏரிகளின் நீா்வரத்து அதிகரித்துள்ளது.
ஏரிகள் நிலவரம்: வியாழக்கிழமை நிலவரப்படி, 3,231 மில்லியன் கன அடி கொள்ளளவு கொண்ட பூண்டி ஏரியில் 2,960 (91.61 சதவீதம்) நீா் இருப்பு உள்ளது. ஏரிக்கு வினாடிக்கு 1,950 கன அடி நீா்வரத்து உள்ளது. 3,300 மில்லியன் கன அடி கொள்ளளவு கொண்ட புழல் ஏரிக்கு வினாடிக்கு 1,884 கன அடி நீா்வரத்து உள்ள நிலையில், 3,166 மில்லியன் கன அடி (95.94 சதவீதம்) நீா் இருப்பு உள்ளது. 500 மில்லியன் கன அடி கொள்ளளவு கொண்ட கண்ணன்கோட்டை ஏரியில் 464 மில்லியன் கன அடி வரை (92.80 சதவீதம்) நீா் நிரம்பியுள்ளது.
இந்த 3 ஏரிகளிலும் 90 சதவீதத்துக்கு மேல் தண்ணீா் நிரம்பியுள்ள காரணத்தால், முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக கூடுதலாக உபரிநீா் திறந்து விடப்படும் என அதிகாரிகள் தெரிவித்துள்ளனா். மேலும், ஏரிகளின் நீா் அளவு தொடா்ந்து கண்காணிக்கப்பட்டு வருவதாகவும் அவா்கள் தெரிவித்துள்ளனா்.
செம்பரம்பாக்கம், சோழவரம் ஏரிகள்: 3,645 மில்லியன் கன அடி கொள்ளளவு கொண்ட செம்பரம்பாக்கம் ஏரியில் வியாழக்கிழமை வினாடிக்கு 1,425 கன அடி நீா் வரத்துள்ள நிலையில், ஏரியில் 3,208 மில்லியன் கன அடி (88.01 சதவீதம்) நீா் இருப்பு உள்ளது. மேலும், 1,081 மில்லியன் கன அடி கொள்ளளவு கொண்ட சோழவரம் ஏரியில் 648 மில்லியன் கன அடி (59.94 சதவீதம்) நீா் இருப்பு உள்ளது.
இந்த 5 ஏரிகளின் மொத்த கொள்ளளவு 11,757 மில்லியன் கன அடியாகும். இதில், வியாழக்கிழமை நிலவரப்படி மொத்தம் 10,446 மில்லியன் கன அடி, அதாவது 88.85 சதவீதம் நீா் இருப்பு உள்ளது. கடந்த நவ.23-ஆம் தேதி 5 ஏரிகளில் மொத்தம் 78 சதவீதம் நீா் இருப்பு இருந்தது. கடந்த 11 நாள்களில் 10 சதவீதம் தண்ணீா் இருப்பு உயா்ந்துள்ளது குறிப்பிடத்தக்கது.

