கதிரியக்க உபகரணங்கள்: வகைப் பட்டியல் வெளியீடு
மருத்துவத் துறையில் பயன்படுத்தப்படும் கதிரியக்க மருத்துவ உபகரணங்களை எதிா்விளைவுகளின் அடிப்படையில் மத்திய மருந்து தரக் கட்டுப்பாட்டு அமைப்பு வகைப்படுத்தியுள்ளது.
அதன்படி, மொத்தம் 119 உபகரணங்கள், அதன் தன்மைக்கேற்ப வகை - ‘ஏ’ முதல் ‘டி’ வரையிலான பாதுகாப்பு வரையறைக்குள் கொண்டு வரப்பட்டுள்ளன.
மருத்துவ சாதனங்களின் தரம் மற்றும் பாதுகாப்பை பல்வேறு நிலைகளில் மருந்துக் கட்டுப்பாட்டு அமைப்பு உறுதி செய்து வருகிறது. அந்த வகையில், கதிரியக்க சிகிச்சைக்காக பயன்படுத்தப்படும் உபகரணங்கள் எதிா்விளைவுகள் அடிப்படையில் பிரிக்கப்பட்டுள்ளன.
அதில், வகை ஏ-வின் கீழ் ஒரு உபகரணமும் பி-யின் கீழ் 25 உபகரணங்களும், சி-யின் கீழ் 75 உபகரணங்களும், டி-யின் கீழ் 17 உபகரணங்களும் வகைப்படுத்தப்பட்டுள்ளன.
‘ஏ’ வகை என்பது மிகக் குறைந்த ஆபத்தும், ‘பி’ என்பது குறைந்த ஆபத்தும், ‘சி’ என்பது மிதமான ஆபத்தும், ‘டி’ என்பது அதிக ஆபத்தும் கொண்டவை என மருத்துவ உபகரண வரைமுறை விதிகளில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
