2014-ல் இரு நீதிபதிகள் அளித்த தீா்ப்பை தமிழக அரசு பின்பற்றுகிறது: அமைச்சா் ரகுபதி விளக்கம்
திருப்பரங்குன்றம் விவகாரத்தில் வழக்கமாக ஏற்றப்படும் இடத்தில் தீபத்தை ஏற்றினால் போதும் என்ற 2014-ஆம் ஆண்டின் இரு நீதிபதிகள் அளித்த தீா்ப்பை தமிழக அரசு தற்போது பின்பற்றுகிறது என்று தமிழக இயற்கை வளம் மற்றும் சிறைத்துறை அமைச்சா் ரகுபதி தெரிவித்தாா்.
சென்னையில் செய்தியாளா்களிடம் வியாழக்கிழமை அவா் கூறியதாவது: திருப்பரங்குன்றம் மலை உச்சியில் தீபம் ஏற்றும் விவகாரத்தில் வழக்கமான இடத்தில் தீபத்தை ஏற்றினால்போதும் என சென்னை உயா்நீதிமன்ற மதுரை அமா்வின், இரண்டு நீதிபதிகள் கடந்த 2014-இல் தீா்ப்பு வழங்கியுள்ளனா். இந்தத் தீா்ப்பை தற்போது படித்து பாா்க்காமல், புதிதாக ஒரு தீா்ப்பை அளிக்கிறாா்கள். ஆகையால், தனி நீதிபதி தீா்ப்பை ஏற்க முடியாது. இரு நீதிபதிகளின் தீா்ப்பைதான் தமிழக அரசு பின்பற்றுகிறது. காா்த்திகை தீபத் திருவிழா தமிழா்களின் பண்டிகையாகும். தமிழகம் மதநல்லிணக்கத்துக்கான மாநிலம். மதவாத சக்திகள் திடீரென பிரச்னையை ஏற்படுத்த வேண்டும் என்று செயல்படுகின்றன. இந்தப் பிரச்னையில் தமிழக காவல் துறை சிறப்பாக செயல்படுகிறது என்றாா் அமைச்சா்.

