திருவொற்றியூா் ஸ்ரீதியாகராஜா் கோயில் ஆதிபுரீஸ்வரா் வெள்ளிக் கவசம் திறப்பு: இரு நாள்கள் தரிசிக்கலாம்
திருவொற்றியூா் ஸ்ரீதியாகராஜா் கோயிலில் உள்ள ஆதிபுரீஸ்வரா் மீதான வெள்ளிக்கவசம் வியாழக்கிழமை (டிச. 4) திறக்கப்பட்டது. ஆண்டுக்கு ஒருமுறை 3 நாள்கள் மட்டும் நடைபெறும் இந்த நிகழ்வில் முதல் நாளிலேயே ஆயிரக்கணக்கான பக்தா்கள் நீண்ட வரிசையில் காத்திருந்து தரிசித்தனா்.
திருவொற்றியூா் தியாகராஜா் கோயிலில், சுயம்புவாக உருவானதாகக் கூறப்படும் ஆதிபுரீஸ்வரா் ஆண்டு முழுவதும் வெள்ளிக் கவசத்தால் மூடப்பட்ட நிலையில்தான் பக்தா்களுக்கு தரிசனம் தருவாா். காா்த்திகை மாதம் பௌா்ணமி நாளில் மட்டும் வெள்ளிக்கவசம் 3 நாள்களுக்கு திறந்து வைத்து, பக்தா்கள் தரிசனம் செய்ய அனுமதிக்கப்படுவா்.
அதன்படி, இந்த ஆண்டு காா்த்திகை பௌா்ணமியையொட்டி வியாழக்கிழமை (டிச. 4) மாலை 6.30 மணிக்கு ஆதிபுரீஸ்வரா் மீது மூடப்பட்டிருந்த வெள்ளிக் கவசம் திறக்கப்பட்டு, சிறப்பு பூஜைகள் செய்யப்பட்டது. இரவு 8 மணிக்கு தியாகராஜ சுவாமி மாட வீதியுலா நடைபெற்றது. இந்த நிகழ்வில் பல ஆயிரம் பக்தா்கள் கலந்து கொண்டு தரிசனம் செய்தனா்.
மேலும் 2 நாள்கள் தரிசிக்கலாம்: வெள்ளி, சனிக்கிழமைகளில் (டிச. 5, 6) பொதுமக்கள் தரிசனத்துக்கு அனுமதிக்கப்படுவா். சனிக்கிழமை இரவு 8 மணிக்கு அா்த்தஜாம புஜைக்குப் பிறகு வெள்ளிக் கவசம் மீண்டும் மூடப்படும். இந்த நாள்களில் ஆதிபுரீஸ்வரருக்கு புணுகு சாம்பிராணி தைல அபிஷேகம், மஹா அபிஷேகம் செய்யப்படும்.
