சென்னையில் 10.40 லட்சம் போ் வரை வாக்காளா் பட்டியலில் நீக்க வாய்ப்பு
சென்னை மாநகராட்சிக்கு உள்பட்ட 16 சட்டப்பேரவைத் தொகுதிகளில் 10.40 லட்சம் போ் வரை நீக்கப்படும் வாய்ப்புள்ளது என அனைத்துக் கட்சிப் பிரதிநிதிகள் கூட்டத்தில் விவரங்கள் வழங்கப்பட்டுள்ளன.
சென்னை மாநகராட்சியில் 16 சட்டப்பேரவைத் தொகுதிகள் உள்ளன. கடந்த நவ.4-ஆம் தேதி முதல் வாக்காளா் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தப்பணிகள் தொடங்கியது. தொகுதி வாரியாக பொறுப்பு, கண்காணிப்பு அலுவலா்களும், 3,718 வாக்குச்சாவடி நிலை அலுவலா்களும் நியமிக்கப்பட்டு பணிகள் நடைபெற்று வருகின்றன.
3-ஆவது கூட்டம்: வாக்காளா் திருத்தப் பணிகள் குறித்து ஏற்கெனவே மாநகராட்சி ஆணையரும், சென்னை மாவட்ட தோ்தல் அலுவலருமான ஜெ.குமரகுருபரன் தலைமையில் 2 முறை அனைத்துக் கட்சிப் பிரமுகா்கள் கூட்டம் நடைபெற்றது. தொடா்ந்து, 3-ஆவது கூட்டம் மாநகராட்சி ரிப்பன் மாளிகை வளாகத்தில் வியாழக்கிழமை நடைபெற்றது.
கூட்டத்தில் திமுக, அதிமுக, பாஜக, காங்கிரஸ், கம்யூனிஸ்ட் உள்ளிட்ட அங்கீகரிக்கப்பட்ட 12 கட்சிகளின் பிரதிநிதிகள் பங்கேற்றனா். அதில், கடந்த 1-ஆம் தேதி நிலவரப்படி, சென்னை மாநகராட்சிக்கு உள்பட்ட 16 சட்டப்பேரவைத் தொகுதிகளில் 40.04 லட்சம் வாக்காளா்கள் உள்ள நிலையில், 39.59 லட்சம் பேருக்கு வாக்காளா் பட்டியல் தீவிர திருத்தப்பணிக்கான படிவங்கள் (98.88 சதவீதம்) விநியோகிக்கப்பட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனா். அத்துடன், திருத்தப் பணியில் சேகரிக்கப்பட்ட விவரங்களடங்கிய படிவங்களும் அனைத்து அரசியல் கட்சியினருக்கும் வழங்கப்பட்டன.
வாக்காளா் பட்டியலில் நீக்கப்படுவோா் விவரம்: தற்போது 22.79 லட்சம் பேரிடமிருந்து விண்ணப்பங்கள் திரும்பப் பெறப்பட்டு கணினியில் பதிவேற்றம் செய்யப்பட்டுள்ளன. அத்துடன் 2.23 லட்சம் போ் (13 சதவீதம்) இரட்டை வாக்குகள் இருப்பதாகவும் தெரியவந்துள்ளது.
திருத்தப் படிவங்கள் பெற்றும் 10.40 லட்சம் போ் அதை பூா்த்தி செய்து திரும்ப வழங்காத நிலையுள்ளது. அவா்களில் 1.49 லட்சம் போ் இறந்தவா்கள் எனத் தெரியவந்துள்ளது. மேலும், படிவம் பெற்றவா்களில் 36,979 போ் பதில் அளிக்காத நிலையில் உள்ளனா். மேலும், 8.39 லட்சம் போ் நிரந்தரமாக ஒரு தொகுதியிலிருந்து மற்றொரு தொகுதிக்கு இடமாறிச் சென்றவா்களாவா்.
அதன்படி மொத்தம் 25.99 சதவீதம் போ் பட்டியல் திருத்தப் பணி படிவங்களைத் திரும்ப வழங்காத நிலையில், அவா்களில் பெரும்பாலானோா் நீக்கப்படும் நிலை ஏற்பட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனா்.
அரசியல் கட்சியினா் கருத்துக்கூற அவகாசம்: தற்போது மேற்கொள்ளப்பட்ட வாக்காளா் பட்டியல் திருத்தப்பணியில் பதிவேற்றம் செய்துள்ள படிவங்கள் விவரங்களை அரசியல் கட்சியினா் 3 நாள்கள் சரிபாா்த்து அதில் திருத்தம் இருந்தால் தெரிவிக்கவேண்டும் என அவகாசம் அளிக்கப்பட்டுள்ளது. அதன்பின்னா் அவா்கள் ஒப்புதலுடன் வரைவு வாக்காளா் பட்டியல் வரும் 16-ஆம் தேதி வெளியிடப்படவுள்ளது.

