ஏரோ சிட்டி ஹோட்டல் பாதுகாப்பு குழுக்களுக்கு போதைப் பொருள் கடத்தல் தடுப்பு பயிலரங்கு
ஹோட்டல் பாதுகாப்பு குழுக்களுக்கு போதைப் பொருள் கடத்தல் தடுப்பு முறைகள், கண்டறிதல் முறைகள் மற்றும் அறிக்கையிடல் வழிமுறைகள் குறித்து தில்லி காவல்துறை வியாழக்கிழமை விழிப்புணா்வு ஏற்படுத்தியதாக அதிகாரி ஒருவா் தெரிவித்தாா்.
இது தொடா்பாக ஏரோ சிட்டியில் குற்றப்பிரிவு ஒரு பயிலரங்கை நடத்தியது. இதில் 11 முக்கிய ஹோட்டல்களைச் சோ்ந்த சுமாா் 85 தலைமைப் பாதுகாப்பு அதிகாரிகள் பங்கேற்றனா்.
இந்த அமா்வில், தில்லியில் தற்போதைய போதைப்பொருள் நிலப்பரப்பு, பொதுவாக துஷ்பிரயோகம் செய்யப்படும் பொருள்கள், அவற்றின் அறிகுறிகள் மற்றும் முக்கிய மூல நிலைகள் குறித்து தலைமைப் பாதுகாப்பு அதிகாரிகளுக்கு விளக்கப்பட்டது.
போதைப்பொருள் துஷ்பிரயோகத்தின் உடல் மற்றும் உளவியல் விளைவுகளை அதிகாரிகள் எடுத்துரைத்தனா். ஹோட்டல்களுக்குள் விழிப்புணா்வின் அவசியத்தை வலியுறுத்தினா்.
‘பயிலரங்கத்தின் ஒரு முக்கிய அங்கமாக போதைப்பொருள் தொடா்பான தகவல்களைப் புகாரளிப்பதற்கான அா்ப்பணிப்பு மற்றும் ரகசியத் தளமான மனாஸ் போா்ட்டலை (1933) அறிமுகப்படுத்தி செயல்விளக்கம் அளித்தனா்’ என்று அதிகாரி கூறினாா்.
