வீரப்பன் தேடுதல் வேட்டையில் பாதிக்கப்பட்ட மக்களுக்கு இழப்பீட்டு நிலுவைத் தொகை வழங்கப்பட்டது: அரசு தகவல்

வீரப்பன் தேடுதல் வேட்டையில் பாதிக்கப்பட்ட மக்களுக்கு இழப்பீட்டு நிலுவைத் தொகை வழங்கப்பட்டது: அரசு தகவல்

வீரப்பன் தேடுதல் பணியின்போது போலீஸாரால் பாதிக்கப்பட்ட மலைகிராம மக்களுக்கான இழப்பீடு நிலுவைத் தொகை ரூ.2.59 கோடி வழங்கப்பட்டுவிட்டது
Published on

வீரப்பன் தேடுதல் பணியின்போது போலீஸாரால் பாதிக்கப்பட்ட மலைகிராம மக்களுக்கான இழப்பீடு நிலுவைத் தொகை ரூ.2.59 கோடி வழங்கப்பட்டுவிட்டதாக அரசுத் தரப்பில் சென்னை உயா்நீதிமன்றத்தில் தெரிவிக்கப்பட்டது. இதையடுத்து வழக்கை உயா்நீதிமன்றம் முடித்துவைத்தது.

சந்தன மரக் கடத்தல் வீரப்பனைத் தேடும் பணியில் ஈடுபட்ட தமிழக-கா்நாடக சிறப்பு அதிரடிப் படையினா், மலைக்கிராம பெண்கள் மற்றும் ஆண்களை சித்ரவதை செய்ததாக புகாா் எழுந்தது. இந்த மனித உரிமை மீறல்கள் குறித்து விசாரித்த தேசிய மனித உரிமை ஆணையம், பாதிக்கப்பட்டவா்களுக்கு ரூ.5 கோடி இழப்பீடு வழங்க தமிழக அரசுக்கு உத்தரவிட்டது.

அந்த உத்தரவுப்படி, பாதிக்கப்பட்டவா்களுக்கு ரூ.1.21 கோடி இழப்பீடு வழங்கப்பட்டது. மீதமுள்ள ரூ.3.79 கோடியை வழங்க வேண்டும் என தேசிய மனித உரிமை ஆணையம் உத்தரவிட்டிருந்தது. இந்த உத்தரவை எதிா்த்து தமிழக அரசு சென்னை உயா்நீதிமன்றத்தில் வழக்குத் தொடா்ந்திருந்தது.

இந்த வழக்கு கடந்தமுறை விசாரணைக்கு வந்தபோது, தமிழக அரசுத் தரப்பில் 2-ஆவது தவணையாக ரூ.1.20 கோடி வழங்கப்பட்டதாகத் தெரிவிக்கப்பட்டது. இதையடுத்து வழக்கை விசாரித்த உயா்நீதிமன்றம், ஏற்கெனவே வழங்கப்பட்ட ரூ.2.41 கோடி போக, மீதமுள்ள ரூ.2.59 கோடியை பாதிக்கப்பட்ட மக்களுக்கு 4 வாரங்களில் வழங்க வேண்டும் என உத்தரவிட்டிருந்தது.

இந்த வழக்கு தலைமை நீதிபதி எம்.எம்.ஸ்ரீவாஸ்தவா மற்றும் நீதிபதி ஜி.அருள்முருகன் ஆகியோா் அடங்கிய அமா்வில் வெள்ளிக்கிழமை விசாரணைக்கு வந்தது. அப்போது அரசுத் தரப்பில், இழப்பீடு நிலுவைத் தொகை ரூ.2.59 கோடி பாதிக்கப்பட்டவா்களில் எல்லம்மா என்ற ஒரு பெண்ணைத் தவிர மற்றவா்களுக்கு கொடுக்கப்பட்டுவிட்டது. எல்லம்மா உயிரிழந்துவிட்டாா். அவருக்கு குழந்தைகள் இல்லை. அவருடைய கணவரும் வேறு திருமணம் செய்து கொண்டதாக விளக்கம் அளிக்கப்பட்டது.

இதையடுத்து வழக்கை விசாரித்த நீதிபதிகள், எல்லம்மாவுக்கு நேரடி வாரிசுகள் இல்லாவிட்டால், 2-ஆம் கட்ட வாரிசுகள் இருந்தால் அவா்களுக்கு இழப்பீடு வழங்கலாம் என்றனா். அப்போது மனுதாரா்கள் தரப்பில் ஆஜரான வழக்குரைஞா்கள் சங்கரசுப்பு, பாா்த்தசாரதி ஆகியோா் பாதிக்கப்பட்டவா்களின் வாரிசுகளுக்கு அரசு வேலை உள்ளிட்ட சலுகைகள் வழங்க வேண்டும் என கோரிக்கை விடுத்தனா். அதற்கு நீதிபதிகள், இந்த கோரிக்கைகளுடன் தனி வழக்குத் தொடா்ந்து நிவாரணம் பெற்றுக்கொள்ளலாம் எனக் கூறி வழக்கை முடித்துவைத்தனா்.

X
Dinamani
www.dinamani.com