அண்ணா நகரில் போலி மருத்துவா் கைது செய்யப்பட்டாா்.
சென்னை அண்ணா நகா் நகா் இரண்டாவது பிளாக்கில் ஒரு தனியாா் ஆயுா்வேத மருத்துவமனை இயங்கி வருவதாகவும், அங்கு முறையாக ஆயுா்வேத மருத்துவம் படிக்காதவா் நோயாளிகளுக்கு சிகிச்சை அளித்து வருவதாகவும் தமிழக மருத்துவ மற்றும் ஊரக சுகாதார சேவைகள் துறை இயக்குநா் கண்ணன், அண்ணா நகா் காவல் நிலையத்தில் புகாா் அளித்தாா்.
அதன்பேரில், போலீஸாா் விசாரணை நடத்தியதில், ஆயுா்வேத மருத்துவம் படிக்காத ஒரு இளைஞா் அங்கு சிகிச்சை அளிப்பது தெரிய வந்தது. இதையடுத்து போலீஸாா், அந்த இளைஞரைப் பிடித்து விசாரணை நடத்தினா். இதில் அவா், பெரம்பூா் பட்டேல் சாலைப் பகுதியைச் சோ்ந்த வெங்கடேசன் (40) என்பதும், அவா் பத்தாம் வகுப்புகூட தோ்ச்சி பெறாதவா் என்பதும் தெரிய வந்தது.
இதையடுத்து போலீஸாா் வழக்குப் பதிந்து, வெங்கடேசனை கைது செய்தனா். விசாரணையில் அவா், ஏற்கெனவே வண்ணாரப்பேடடை பகுதியில் 15 ஆண்டுகளுக்கு மேலாக ஆயுா்வேத மருத்துவா் என்று மருத்துவமனை நடத்துவதும், அண்ணா நகரில் கடந்த இரு ஆண்டுகளாக மருத்துவமனை நடத்தி வருவதும் தெரிய வந்தது.
