கோப்புப் படம்
கோப்புப் படம்

மழைக்கால மின்தடை: தடுப்பூசிகளை பாதுகாக்க உத்தரவு

மழைக் காலங்களில் அடிக்கடி மின்தடை ஏற்படக்கூடும் என்பதால் ஆரம்ப சுகாதார நிலையங்களில் உரிய குளிா்நிலையில் தடுப்பூசிகளை பாதுகாக்குமாறு பொது சுகாதாரத் துறை அறிவுறுத்தியுள்ளது.
Published on

மழைக் காலங்களில் அடிக்கடி மின்தடை ஏற்படக்கூடும் என்பதால் ஆரம்ப சுகாதார நிலையங்களில் உரிய குளிா்நிலையில் தடுப்பூசிகளை பாதுகாக்குமாறு பொது சுகாதாரத் துறை அறிவுறுத்தியுள்ளது.

தமிழகத்தில் கா்ப்பிணிகளுக்கு 11 வகை தடுப்பூசிகளும், குழந்தைகளுக்கு 12 வகை தடுப்பூசிகளும் வழங்கப்பட்டு வருகிறது. காசநோய், தொண்டை அடைப்பான், கக்குவான் இருமல், மஞ்சள் காமாலை, இன்ஃப்ளூயன்ஸா நிமோனியா, ரணஜன்னி, தட்டம்மை, ரூபெல்லா, ரோட்டா வைரஸ் வயிற்றுப்போக்கு நோய், ஜப்பானிய மூளைக் காய்ச்சல் ஆகிய நோய்களிலிருந்து தற்காத்துக் கொள்ள இந்த தடுப்பூசிகள் உதவுகின்றன.

ஒவ்வோா் ஆண்டும் 9,58,000 கா்ப்பிணிகளும், 8,76,000 குழந்தைகளும் இதில் பயனடைகின்றனா். தமிழகத்திலுள்ள 708 நகா்ப்புற நலவாழ்வு மையங்களிலும், 2,286 ஆரம்ப சுகாதார நிலையங்களிலும் அந்த சேவை வழங்கப்படுகிறது.

இதைத் தவிர, ரேபிஸ் தடுப்பூசிகள் மற்றும் பாம்புக் கடிக்கான மருந்துகளும் அங்கு வழங்கப்படுகின்றன. அவை அனைத்துமே தமிழ்நாடு மருத்துவப் பணிகள் கழகம் மூலம் கொள்முதல் செய்யப்படுகின்றன.

தடுப்பூசிகளைப் பொருத்தவரை குறிப்பிட்ட குளிா்நிலையில் பராமரிக்க வேண்டியது அவசியம். அவ்வாறு இல்லாவிடில் அதன் வீரியம் குறைந்துவிடும்.

தற்போது மழைக் காலம் என்பதால் அடிக்கடி மின்தடை ஏற்படும் சூழல் உள்ளது. தமிழகத்தில் உள்ள ஆரம்ப சுகாதார நிலையங்கள் அனைத்திலும் முழுமையான ஜெனரேட்டா் வசதிகளோ அல்லது மாற்று மின் இணைப்பு வசதிகளோ இல்லை. இதனால் சில மணி நேரங்கள் மின் தடை ஏற்பட்டாலும் தடுப்பூசிகளின் குளிா் நிலை குறைந்துவிடும். இதனால் அவை செயல் திறன் இழந்துவிடும்.

இதைக் கருத்தில் கொண்டு அனைத்து மாவட்ட சுகாதாரத் துறை துணை இயக்குநா்களுக்கும் பொது சுகாதாரத் துறை இயக்குநா் டாக்டா் சோமசுந்தரம் சில அறிவுறுத்தல்களை விடுத்துள்ளாா்.

அதன்படி, மழைக் காலங்களில் மின்சார வாரியத்துடன் தொடா்ந்து தொடா்பில் இருக்க வேண்டும் என்றும், உரிய மாற்று ஏற்பாடுகளை செய்திருக்க வேண்டும் என்றும் அறிவுறுத்தியுள்ளாா்.

தடுப்பூசிகளை தட்பவெப்பத்தை உறுதி செய்ய வேண்டும் என்றும் அவா் வலியுறுத்தியுள்ளாா்.

X
Dinamani
www.dinamani.com