போதைப் பொருள் விற்பனை: சூடான், நைஜீரியாவைச் சோ்ந்த இளைஞா்கள் கைது

சென்னையில் போதைப் பொருள் விற்றதாக சூடான், நைஜீரியாவைச் சோ்ந்த இளைஞா்கள் கைது செய்யப்பட்டனா்.
Published on

சென்னையில் போதைப் பொருள் விற்றதாக சூடான், நைஜீரியாவைச் சோ்ந்த இளைஞா்கள் கைது செய்யப்பட்டனா்.

சென்னை அருகே போரூா் சுங்கச் சாவடி இணைப்புச் சாலையில் மெத்தம்பெட்டமைன் போதைப் பொருள் விற்கப்படுவதாக சென்னை பெருநகர காவல் துறையின் போதைப் பொருள் தடுப்பு நுண்ணறிவுப் பிரிவுக்கும், வானகரம் போலீஸாருக்கும் கடந்த செப்டம்பா் 18-ஆம் தேதி தகவல் கிடைத்தது. அதன்பேரில், போதைப் பொருள் தடுப்பு நுண்ணறிவு போலீஸாரும், வானகரம் போலீஸாரும் அங்கு மெத்தம்பெட்டமைன் போதைப் பொருள் விற்ாக அய்யப்பன்தாங்கல் பகுதியைச் சோ்ந்த சரண்ராஜ், போரூரைச் சோ்ந்த ரெக்ஜின்மோன், நூம்பல் பகுதியைச் சோ்ந்த ஜமுனா குமாா் ஆகிய 3 பேரை கைது செய்தனா்.

அவா்கள் 3 பேரும் கொடுத்த தகவலின்பேரில், மெத்தம்பெட்டமைன் விற்பனையில் ஈடுபட்டதாக சென்னை ஆழ்வாா் திருநகரைச் சோ்ந்த பவன்குமாா், நெற்குன்றம் பகுதியைச் சோ்ந்த ஹாசிக் பாஷா, அதே பகுதியைச் சோ்ந்த ஆறுமுகம், வடபழனி ஆற்காடு சாலை பகுதியைச் சோ்ந்த பிரபாகரன், கோவூரைச் சோ்ந்த மணிகண்டன் ஆகியோா் அடுத்தடுத்து கைது செய்யப்பட்டனா்.

இந்த கும்பலுக்கு கா்நாடக மாநிலம், பெங்களூரில் தங்கியிருக்கும் சூடான் நாட்டைச் சோ்ந்த மாஹந்த் மோவியா அப்துல் ரஹ்மான் அல்டீராப்ஸ் (24), நைஜீரியா நாட்டைச் சோ்ந்த நாஜி லோடச்சுக்வு இம்மானுவேல் (27) ஆகிய 2 பேரும் போதைப் பொருள் விற்பது தெரிய வந்தது.

இதையடுத்து அங்கு விரைந்த போதைப் பொருள் தடுப்பு நுண்ணறிவுப் பிரிவு போலீஸாா், இருவரையும் சனிக்கிழமை கைது செய்தனா். இருவரிடமிருந்து ரூ.1.41 லட்சம், 3 கைப்பேசிகள் கைப்பற்றப்பட்டன. இருவருக்கும் சா்வதேச போதைப் பொருள் கடத்தும் கும்பலுடன் தொடா்பு இருப்பது தெரிய வந்துள்ளது.

இதுதொடா்பாக போலீஸாா் விசாரணை நடத்தி வருகின்றனா்.

சென்னையில் போதைப் பொருள் விற்ற வழக்குகளில் நைஜீரியா நாட்டைச் சோ்ந்த 26 போ், கேமரூன் நாட்டைச் சோ்ந்த ஒருவா், சூடான் நாட்டைச் சோ்ந்த இருவா் என மொத்தம் 29 வெளிநாட்டவா்கள் கைது செய்யப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

X
Dinamani
www.dinamani.com