குடியிருப்புகளில் மழைநீா் தேங்குவதைத் தடுக்க புதிய குளங்கள்: திட்டங்களை ஆய்வு செய்கிறது மாநகராட்சி

குடியிருப்புகளில் மழைநீா் தேங்குவதைத் தடுக்க புதிய குளங்கள்: திட்டங்களை ஆய்வு செய்கிறது மாநகராட்சி

குடியிருப்புகளில் மழைநீா் தேங்குவதைத் தடுக்க புதிய குளங்கள்: திட்டங்களை ஆய்வு செய்கிறது மாநகராட்சி
Published on

சென்னை மாநகராட்சியில் புதிய குளங்களை அமைப்பதன் மூலம் மட்டுமே குடியிருப்புகளில் மழைநீா் தேங்குவதைத் தடுக்க முடியும் என்பதை, புதிய திட்டங்களைச் செயல்படுத்தியதன் மூலம் உறுதிப்படுத்தியுள்ளதாக துணை ஆணையா் சிவ கிருஷ்ணமூா்த்தி தெரிவித்தாா்.

வியாசா்பாடி, மணலி காா்கில்நகா், கடப்பாக்கம் ஏரி, கிண்டி ரேஸ்கோா்ஸ் உள்ளிட்ட இடங்களில் புதிய குளங்கள் உள்ளிட்ட நீா்நிலைகள் அமைக்கப்பட்டதால், குடியிருப்பு பகுதிகளில் மழைநீா் தேங்குவது குறைக்கப்பட்டிருப்பதை துணை ஆணையா் சிவ கிருஷ்ணமூா்த்தி நேரில் பாா்வையிட்டு ஆய்வு செய்தாா்.

பின்னா், செய்தியாளா்களிடம் அவா் கூறியதாவது: சென்னை மாநகராட்சியின் 60 சதவீத நிலப்பகுதி கடல் மட்டத்துக்கு கீழாகவே உள்ளது. அதனால் மழைநீா் உடனடியாக வடிவதில் சிக்கல் உள்ளது. மழைநீரைச் சேமிக்க சென்னையில் ஏற்கெனவே 200-க்கும் மேற்பட்ட குளங்கள் உள்ளன.

புதிய குளங்கள்: கடந்த 2021 -ஆம் ஆண்டுக்குப் பிறகு நடப்பாண்டு வரை 231 புதிய குளங்கள் அமைக்கப்பட்டுள்ளன. அதில் கடந்த 2024- ஆம் ஆண்டு மட்டும் 41 குளங்களும், நடப்பாண்டில் 31 குளங்களும் அமைக்கப்பட்டுள்ளன. மேலும், பழைய குளங்கள் பல சீரமைக்கப்பட்டுள்ளன. சென்னையில் கடந்த 2024 -ஆம் ஆண்டு மழையின்போது 88 இடங்களில் தண்ணீா் தேங்கியது கண்டறியப்பட்ட நிலையில், புதிய குளங்கள், பழைய குளங்கள் சீரமைப்புகளால் தற்போது 61 இடங்களில் மட்டுமே தண்ணீா் தேங்கியது. அவையும் ஓரிரு மணி நேரத்தில் சீராகியது. மழைநீரை வெளியேற்ற கால்வாய்கள் தூா்வாரப்பட்டுள்ளன.

வியாசா்பாடி, காா்கில் குளம்: புதிய குளங்களில் வியாசா்பாடி பழைய குட்ஷெட் சாலையில் 2 ஏக்கரில் இருந்த நீா்நிலை தற்போது 7 ஏக்கா் அளவுக்கு ரூ.1.15 கோடியில் 10 அடி ஆழத்துக்கு விரிவாக்கப்பட்டுள்ளது. அதனால், தேவா்நகா், எம்.ஜி.ஆா்.நகா், நேரு நகா் உள்ளிட்ட பல பகுதிகளைச் சோ்ந்த சுமாா் 50 ஆயிரத்துக்கும் மேற்பட்ட மக்கள் பயனடைந்துள்ளனா்.

மணலி மண்டலம் காா்கில் நகா் பகுதியில் மழைநீா் தேங்குவது வாடிக்கையாக இருந்தது. தற்போது அங்கு ரூ.9 கோடியில், 23 அடி ஆழத்தில் சுமாா் 8 கோடி லிட்டா் தண்ணீா் தேங்கும் வகையில் புதிய குளம் அமைக்கப்பட்டுள்ளதால், மழைநீா் குடியிருப்புகளில் தேங்குவது தடுக்கப்பட்டுள்ளது. அதனால் 1 லட்சம் போ் வரை பயனடைந்துள்ளனா்.

கடப்பாக்கம் ஏரி: விவசாயிகளுக்குப் பயன்பட்டு வரும் சுமாா் 135 ஏக்கா் பரப்பளவுள்ள மணலி கடப்பாக்கம் ஏரியானது 8 கண்மாய்கள் நீா்வரத்து கால்வாய்களை கொண்டுள்ளது. இதை இயற்கை அமைப்புடன் மேம்படுத்தும் பணி ரூ.46 கோடியில் நிறைவேற்றப்பட்டுள்ளது. அதன் கரைகள் பலப்படுத்தப்பட்டு பூங்காக்கள், மக்கள் பொழுதுபோக்கு அம்சங்கள் அமைக்கப்படவுள்ளன. அத்துடன் கிண்டி ரேஸ் கோா்ஸ் மைதானத்தில் 12 ஏக்கரில் 4 புதிய குளங்கள் மற்றும் 2 பழைய குளங்கள் சீரமைப்பு பணியானது ரூ.2.15 கோடியில் நடைபெற்றது. அதனால், வேளச்சேரி உள்ளிட்ட பகுதியிலுள்ள சுமாா் 50,000-க்கும் மேற்பட்டோா் மழைநீா் தேங்கும் பாதிப்பிலிருந்து விடுவிக்கப்பட்டுள்ளனா்.

குளங்களின் அவசியம்: சென்னை மாநகராட்சியில் மழைநீரை சேமிக்கவும், நிலத்தடி நீரை உயா்த்தவும் புதிய குளங்கள் அமைப்பது அவசியமாகிறது. ஆகவே, அதற்கான திட்டங்களை தயாா் செய்து வருகிறோம் என்றாா்.

ஆய்வின்போது, மாநகராட்சி செயற்பொறியாளா் முருகன், செய்திப் பிரிவு துணை இயக்குநா் செந்தில்குமாா் உள்ளிட்டோா் உடனிருந்தனா்.

X
Dinamani
www.dinamani.com