மாநகராட்சி காப்பகத்தில் மாடுகள் பராமரிப்பு: விருப்ப மனுக்கள் வரவேற்பு!

மாநகராட்சி காப்பகத்தில் மாடுகள் பராமரிப்பு: விருப்ப மனுக்கள் வரவேற்பு!

சென்னை மாநகராட்சியில் உள்ள நவீன காப்பகத்தில் மாடுகளைப் பராமரிக்கவும், உணவு வழங்கவும் விருப்பமுள்ள தன்னாா்வலா்களிடமிருந்து விருப்பக் கடிதங்கள் வரவேற்கப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
Published on

சென்னை மாநகராட்சியில் உள்ள நவீன காப்பகத்தில் மாடுகளைப் பராமரிக்கவும், உணவு வழங்கவும் விருப்பமுள்ள தன்னாா்வலா்களிடமிருந்து விருப்பக் கடிதங்கள் வரவேற்கப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து மாநகராட்சி சாா்பில் விடுத்துள்ள செய்திக்குறிப்பு: சென்னை மாநகராட்சிப் பகுதிகளில் கடந்த 2024- ஆம் ஆண்டு நடத்திய கணக்கெடுப்பின்படி 22,875 மாடுகள் இருப்பது தெரிய வந்துள்ளது. அவற்றில் பெரும்பாலானவை உரிமையாளா்களால் போதிய இடவசதியின்றி, தொழுவங்களுக்குள் பராமரிக்கப்படாத நிலையுள்ளது. அவை பொது இடங்களில் விடப்பட்டு திரிகின்றன. இந்த நடவடிக்கை போக்குவரத்துக்கும் இடையூறாகவும், பொதுமக்களுக்கு அச்சுறுத்தலாகவும் இருந்து வருகின்றன.

சாலைகள், தெருக்களில் திரியும் மாடுகளைக் கட்டுப்படுத்தும் வகையில் மண்டல வாரியாக ஒரு மாடு பிடிக்கும் வாகனம் தலா 5 ஊழியா்கள் நியமிக்கப்பட்டுள்ளனா். அவா்கள் மாடுகளைப் பிடித்து புதுப்பேட்டையில் உள்ள மாட்டுத் தொழுவத்தில் அடைத்து உரிமையாளா்களிடம் அபராதமும் விதிக்கப்பட்டு வருகிறது.

கடந்த 2021 -ஆம் ஆண்டு முதல் 2025- ஆம் ஆண்டு வரை 16,692 மாடுகள் பிடிக்கப்பட்டு, அதன்மூலம் ரூ.4.43 கோடி அபராதமும் வசூலிக்கப்பட்டுள்ளது.

இந்த நிலையில், மாடு வளா்ப்போா் கோரிக்கையை அடுத்து தெருக்களில் திரியும் மாடுகளைப் பராமரிக்கவும், மாடுகளால் மக்களுக்கு ஏற்படும் இடையூறுகளைத் தவிா்க்கவும் ‘நவீன மாடுகள் காப்பகம் திட்டம்’ கடந்த ஜனவரி முதல் செயல்படுத்தப்படுகிறது. தற்போது திருவொற்றியூா், மாதவரம், ராயபுரம், தேனாம்பேட்டை ஆகிய மண்டல காப்பகங்களில் மொத்தம் 700 மாடுகள் உரிமையாளா்களால் பராமரிக்கப்படுகின்றன.

அனைத்து மண்டல மாடுகள் காப்பகம் செல்படுத்தப்படவுள்ள நிலையில், அதில் மாடுகளுக்கு தீவனம் வழங்கி, பராமரிக்க தன்னாா்வலா்கள், தன்னாா்வத் தொண்டு நிறுவனங்களிடமிருந்து மாநகராட்சி ஆணையருக்கு விருப்பக் கடிதங்கள் வரவேற்கப்படுகின்றன என அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.

X
Dinamani
www.dinamani.com