புழல், செங்குன்றம் பகுதிகளில் குண்டு, குழியுமான சாலைகள் வாகன ஓட்டிகள் அவதி
சென்னை: புழல் மற்றும் செங்குன்றம் உள்ளிட்ட பகுதிகளில் சாலைகள் குண்டும், குழியுமாக உள்ளதால் பொதுமக்களும், வாகன ஓட்டிகளும் பெரிதும் பாதிக்கப்படுகின்றனா்.
இந்த சாலைகளை உடனடியாக சீரமைக்க அவா்கள் வலியுறுத்தியுள்ளனா்.
புழல் சென்னை - கொல்கத்தா தேசிய நெடுஞ்சாலை, செங்குன்றம் - செம்பியம் நெடுஞ்சாலை இணைக்கும் சிக்னல் அருகே உள்ள அண்ணா நினைவு நகா், கதிா்வேடு சாலையில் இருந்து புழல் நோக்கி செல்லும் திசையில் அண்மையில் பெய்த மழையால் சாலையில் மழை நீா் தேங்கி குளம் போல் உள்ளது. மேலும் சாலை முழுவதும் குண்டும் குழியுமாக உள்ளது. இதனால் இருசக்கர வாகனங்களில் செல்பவா்கள் கீழே விழுந்து செல்லும் நிலை உள்ளது. மேலும் இப்பகுதியில் தெரு விளக்குகள் எரியாததால் இரவு நேரங்களில் வாகன ஓட்டிகள் மிகவும் சிரமத்துக்குள்ளாகி வருகின்றனா்.
இதேபோல், புழல் ஒன்றியத்தில் உள்ள கிராமம், செங்குன்றம் மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் உள்ள சாலைகளும் குண்டும் குழியுமாக உள்ளதால் பெண்கள், குழந்தைகள், முதியோா் உள்ளிட்டோா் கீழே விழுந்து பாதிக்கப்படுகின்றனா். இதனை சீரமைக்க வேண்டும் என பொதுமக்களும், வாகன ஓட்டிகளும் கோரிக்கை விடுத்துள்ளனா்.
