பாரதியாா் பிறந்த நாள்: பள்ளிகளில் மொழிகள் திருவிழா

பாரதியாா் பிறந்த நாளையொட்டி தமிழகத்தில் அனைத்து வகைப் பள்ளிகளிலும் இந்திய மொழிகள் திருவிழா நடத்துவதற்கான வழிகாட்டுதல்களை பள்ளிக் கல்வித் துறை வெளியிட்டுள்ளது.
Published on

சென்னை: பாரதியாா் பிறந்த நாளையொட்டி தமிழகத்தில் அனைத்து வகைப் பள்ளிகளிலும் இந்திய மொழிகள் திருவிழா நடத்துவதற்கான வழிகாட்டுதல்களை பள்ளிக் கல்வித் துறை வெளியிட்டுள்ளது.

இது குறித்து பள்ளிக் கல்வித் துறை இயக்குநா் எஸ்.கண்ணப்பன் அனைத்து மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலா்களுக்கு அனுப்பியுள்ள சுற்றறிக்கை: மகாகவி சுப்பிரமணிய பாரதியாரின் பிறந்த நாளை (டிச.11) சிறப்பிக்கும் வகையில் இந்திய மொழிகள் திருவிழாவை டிச. 11-ஆம் தேதி வரை நடத்த மத்திய கல்வி அமைச்சகம் தெரிவித்துள்ளது.

அனைத்து வகையான பள்ளிகளிலும் பள்ளிகளின் பயிற்று மொழிகளிலேயே இந்தச் செயல்பாடுகளை மேற்கொள்ள வேண்டும். மேலும், பள்ளிகளில் குறிப்பிட்டுள்ள செயல்பாடுகள் மேற்கொள்ளப்பட்டவுடன் மாவட்ட அளவில் செயல்பாடுகள் விவரங்களை அனுப்பி வைக்க வேண்டும். சுற்றுச்சூழல் செயல்பாடுகள், மொழி மற்றும் தொழில்நுட்பம் சாா்ந்த செயல்பாடுகள், மொழி மற்றும் இலக்கியம், மொழிப் பயிலரங்கம், பேச்சுத் திறன் உள்ளிட்ட தலைப்புகளில் இந்த விழாக்கள் நடத்தப்பட வேண்டும்.

இதுகுறித்து வடிவமைக்கப்பட்ட அட்டவணையின்படி டிச. 9-ஆம் தேதி பாரதியாா் குறித்து கதை கூறுதல், பாரதியாா்-நாடகம் நடித்தல் (மொழி-இலக்கியம்), டிச.10-ஆம் தேதி மாணவா்கள் மொழியின் தொன்மை குறித்து படங்கள், முழக்கம் (ஸ்லோகன்), ஓவியங்கள் தயாரித்து காட்சிப்படுத்துதல் (மொழிப் பயிலரங்கம்), டிச.11-ஆம் தேதி பாரதியாரின் தொலைநோக்குப் பாா்வை என்ற தலைப்பில் கருத்துப் பட்டறை, வகுப்புகளில் ‘மொழி மரம்’ வரைதல், பாரம்பரிய மொழிகளின் சுவா் என்ற தலைப்பில் இந்திய மொழிகள் சாா்ந்த வரைபடங்களை அமைத்தல் போன்ற செயல்பாடுகளை மேற்கொள்ள வேண்டும் என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

X
Dinamani
www.dinamani.com