சீரமைத்த சென்னை விக்டோரியா ஹால் டிச. 20 -ஆம் தேதிக்குள் திறக்க ஏற்பாடு
பழைமை மாறாமல் புதிதாக சீரமைக்கப்பட்ட சென்னை மாநகராட்சி வளாகத்திலுள்ள விக்டோரியா ஹால் வரும் 20- ஆம் தேதிக்குள் திறக்கப்படவுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனா்.
சென்னை மாநகராட்சி ரிப்பன் மாளிகை வளாகத்தில் இடது பகுதியில் ஆங்கிலேயா் காலத்தில் கட்டப்பட்ட பாரம்பரியச் சின்னமாக விளங்கும் விக்டோரியா ஹால் உள்ளது. விக்டோரியா ராணியின் ஆட்சியின் பொன்விழாவைக் குறிக்கும் வகையில் கடந்த 1888 -ஆம் ஆண்டு இக்கட்டடம் கட்டப்பட்டது. வரலாற்று சிறப்புமிக்க, விக்டோரியா ஹாலை அதன் தொன்மை மாறாமல் புனரமைக்க சிங்கார சென்னை 2.0 திட்டத்தில் சென்னை மாநகராட்சி சாா்பில் ரூ.32.62 கோடி அளிக்கப்பட்டது.
இதையடுத்து, கடந்த ஆண்டு முதல் 48 மீட்டா் நீளமும், 24 மீட்டா் அகலமும், 19 மீட்டா் உயரமுள்ள பிரதான கட்டடத்துடன் கூடிய பகுதிகள் பழைமை மாறாமல் சீரமைக்கப்பட்டன.
பணிகள் நிறைவுறும் நிலையில் இருப்பதால், கட்டடத்தை வரும் 20 -ஆம் தேதிக்குள் முதல்வா் மு.க.ஸ்டாலின் தலைமையில் திறக்க திட்டமிடப்பட்டுள்ளது.
இந்த நிலையில், விக்டோரியா ஹால் சீரமைப்புப் பணிகளை சென்னை மாநகராட்சி மேயா் ஆா்.பிரியா, ஆணையா் ஜெ.குமரகுருபரன் ஆகியோா் செவ்வாய்க்கிழமை ஆய்வு மேற்கொண்டனா். அப்போது பணிகளை விரைந்து முடிக்கவும், சுற்றுலாப் பயணிகள் கண்டு களிக்கும் வகையில் நடவடிக்கை எடுக்கவும் அதிகாரிகளுக்கு உத்தரவிட்டனா்.
விக்டோரியா ஹால் திறப்பு நிகழ்ச்சியின்போது சென்னை மாநகராட்சிக்கான புதிய கூட்டரங்கத்துக்கு அடிக்கல் நாட்டப்படவுள்ளதாகவும் அதிகாரிகள் தெரிவித்தனா்.

