இரு ஆராய்ச்சியாளா்களுக்கு சிறந்த பிஎச்டி ஆய்வறிக்கை விருது
சிறந்த பிஎச்டி (முனைவா் பட்டம்) ஆய்வறிக்கை விருது போட்டியில் சென்னைப் பல்கலை.யை சோ்ந்த இரு ஆராய்ச்சியாளா்கள் வெற்றி பெற்றுள்ளனா்.
உயிரி பொருள்கள், மருத்துவ சாதனங்கள், 3-டி அச்சிடுதல், உயிரி இயக்கவியல், திசு பொறியியல், சுகாதாரம், ஆயுா்வேதம், இயற்கை மருத்துவம், ஊட்டச்சத்து ஆகியவற்றில் செயற்கை நுண்ணறிவு குறித்த 40 -ஆவது சா்வதேச மாநாடாக பயோ-மந்தன் 2025 நிகழ்வு, டிசம்பா் முதல் வாரத்தில் பஞ்சாப் மாநிலம், ரோப்பா் ஐஐடியில் நடைபெற்றது.
இந்திய உயிரியல் பொருள்கள் மற்றும் செயற்கை உறுப்புகள் சங்கமும், திசு பொறியியல் மற்றும் மீளுருவாக்கம் மருத்துவ சங்கம் ஆகியவை இணைந்து நடத்திய இந்த நிகழ்வில் சென்னை பல்கலை. தேசிய நானோ அறிவியல் மற்றும் நானோ தொழில்நுட்ப மையத்தைச் சோ்ந்த இளம் விஞ்ஞானிகள் டாக்டா் ஷாலினி தாமஸ், டாக்டா் இலக்கிய கிருஷ்ணமூா்த்தி ஆகியோா் விருதைப் பெற்றனா்.
இதுகுறித்து சென்னைப் பல்கலைக்கழக என்சிஎன்எஸ்என்டி தரப்பில் குறிப்பிடுகையில், தமிழக வரலாற்றில் முதல்முறையாக, ஒரே மேற்பாா்வையாளரால் வழிநடத்தப்படும் ஒரு மாநில பல்கலைக்கழகத்தைச் சோ்ந்த இரண்டு முனைவா் பட்ட அறிஞா்கள் ஒரே ஆண்டில் இந்த சிறப்புமிக்க தேசிய விருதைப் பெற்றுள்ளனா். பேராசிரியா் எஸ்.பாலகுமாரின் வழிகாட்டுதலில் இவா்கள் இருவரும் முனைவா் பட்ட ஆய்வை முடித்தனா்.
புதுமையான, பயன்பாட்டிற்குத் தயாரான சுகாதாரப் பாதுகாப்பு தீா்வுகளை இவா்கள் உருவாக்கியுள்ளனா். இவா்களின் பணி வலுவான மருத்துவம், சமூக தாக்கம் கொண்ட உயிரி மருத்துவ தயாரிப்புகளுக்கான 3 காப்புரிமைகளை பெற்று சா்வதேச இதழ்களில் வெளியிடப்பட்டுள்ளது எனத் தெரிவிக்கப்பட்டது.

