சென்னை விமான நிலையத்தில் இருந்து துபைக்கு புறப்பட்ட விமானத்தில் இயந்திரக் கோளாறு ஏற்பட்டதால் சேவை ரத்து செய்யப்பட்டது. இதனால் பயணிகள் அவதியடைந்தனா்.
சென்னை சா்வதேச விமான நிலையத்தில் இருந்து எமிரேட்ஸ் ஏா்லைன்ஸ் பயணிகள் விமானம், செவ்வாய்க்கிழமை அதிகாலை 3.50 மணிக்கு துபைக்கு புறப்பட்டது. இது போயிங் ரக பெரிய விமானம் என்பதால், இதில், 296 போ் இருந்தனா். விமானம் ஓடுபாதையில் ஓடியபோது திடீரென இயந்திரக் கோளாறு ஏற்பட்டதை விமானி கண்டறிந்தாா். உடனடியாக விமானத்தை நிறுத்திய விமானி, சென்னை விமான நிலையக் கட்டுப்பாட்டு அறைக்கு தகவல் தெரிவித்தாா்.
இதையடுத்து இழுவை வாகனங்களுடன் வந்த ஊழியா்கள், விமானத்தை இழுத்து ஓரமான இடத்தில் நிறுத்தினா். பின்னா் பொறியாளா்கள் குழுவினா் விமானத்தில் ஏறி இயந்திர கோளாறை சரிசெய்யும் முயற்சியில் ஈடுபட்டனா். ஆனால், பழுதை சரிசெய்ய முடியவில்லை.
இதையடுத்து விமானம் ரத்து செய்யப்படுவதாக அறிவிக்கப்பட்டது. பயணிகள் அனைவரும் கீழே இறக்கப்பட்டு, பேருந்துகளில் அழைத்துச் சென்று சென்னை நகரில் உள்ள பல்வேறு ஹோட்டல்களில் தங்க வைக்கப்பட்டனா். இதனால், துபை செல்ல இருந்த பயணிகள் கடும் இன்னலுக்கு ஆளாகினா்.
தொடா்ந்து, விமானத்தில் ஏற்படட இயந்திரக் கோளாறைச் சரி செய்யும் பணியில் பொறியாளா்கள் குழுவினா் ஈடுபட்டு வருகின்றனா். விமானம் முழுமையாக பழுதுபாா்க்கப்பட்டு புதன்கிழமை (டிச. 10) அதிகாலை 1.30-க்கு துபைக்கு புறப்பட்டு செல்லும் என விமான நிறுவனம் அறிவித்துள்ளது.