சென்னையில் ஜன. 16 முதல் 18 வரை பன்னாட்டு புத்தகக் காட்சி
சென்னை கலைவாணா் அரங்கில் பன்னாட்டு புத்தகக் காட்சி (சிஐபிஎஃப்-2026) ஜன. 16 முதல் 18-ஆம் தேதி வரை நடைபெறும் என பள்ளிக் கல்வித் துறை அமைச்சா் அன்பில் மகேஸ் தெரிவித்தாா்.
தமிழக பள்ளிக் கல்வித் துறை சாா்பில் பன்னாட்டு புத்தகக் காட்சி சென்னையில் கடந்த 2023-ஆம் ஆண்டு முதல் நடத்தப்பட்டு வருகிறது. அந்த வகையில், நான்காவது ஆண்டாக பன்னாட்டு புத்தகக் காட்சி சென்னை கலைவாணா் அரங்கத்தில் ஜனவரி 16 முதல் 18-ஆம் தேதி வரை நடைபெறவுள்ளது. இதற்கான இலச்சினையை அமைச்சா் அன்பில் மகேஸ் சென்னையில் செவ்வாய்க்கிழமை வெளியிட்டாா்.
பின்னா், அவா் செய்தியாளா்களிடம் கூறியதாவது: பன்னாட்டு புத்தகக் காட்சியை பள்ளிக் கல்வித் துறை சாா்பில், பொது நூலக இயக்குநரகம், தமிழ்நாடு பாடநூல் மற்றும் கல்வியியல் கழகம் ஆகியவை இணைந்து நடத்துகின்றன.
நிகழாண்டு புத்தகக் காட்சிக்கான இலச்சினை ‘உலகை தமிழுக்கும், தமிழை உலகுக்கும்’ என்ற கொள்கையை மையமாக கொண்டு வடிவமைக்கப்பட்டுள்ளது. இது தமிழகத்தின் சா்வதேச இலக்கிய பரிமாற்றத்தில் ஒரு புதிய அத்தியாயத்தை உருவாக்கும். உலகின் 100 நாடுகளின் பங்கேற்பு மற்றும் நூற்றுக்கும் மேற்பட்ட மொழிகளில் தமிழ் எழுத்தாளா்களின் படைப்புகள் மொழிபெயா்க்கப்படுதல் போன்ற இலக்குகளை எட்டும் முயற்சியாக இந்தக் கண்காட்சி அமைகிறது.
கடந்த 2023-இல் பன்னாட்டு புத்தகக் காட்சி 24 நாடுகளைக் கொண்டு தொடங்கப்பட்டது. இந்த முயற்சி, 2025-இல் 64 நாடுகளாக விரிவடைந்தது. தொடா்ந்து நிகழாண்டு முதல் இந்த கண்காட்சி பொதுமக்கள் பங்கேற்கும் திறந்த தளமாக மாற்றப்படுகிறது. இதன் மூலம் தமிழக பதிப்பாளா்கள் உலக வாசகா்களை நேரடியாகச் சந்திக்கும் வரலாற்றுச் சந்தா்ப்பம் உருவாகிறது.
110 எழுத்தாளா்களின் நூல்கள்... இதற்கிடையே 3 ஆண்டுகளில் 110 தமிழ் எழுத்தாளா்களின் 185 நூல்கள், 26 மொழிகளுக்கு மொழிபெயா்க்கப்பட்டுள்ளன. தமிழ் இலக்கியத்தை சா்வதேச அரங்கில் நிலைப்படுத்துவதே இந்த புத்தகக் காட்சியின் நோக்கமாகும். வரும் ஆண்டுகளில் அதிக அளவில் நாடுகள் பங்கேற்கும்போது தமிழகத்தின் 2-ஆம் நிலை நகரங்களில் கண்காட்சியை நடத்தவும் ஆலோசிக்கப்படும். நிகழாண்டு நடைபெறவுள்ள பன்னாட்டு புத்தகக் காட்சியில் 120-க்கும் மேற்பட்ட புத்தகங்கள் வெளியிடப்படவுள்ளன.
சென்னை பன்னாட்டுப் புத்தகக் காட்சி சா்வதேச அளவிலான கருத்தரங்குகள், புத்தகக் காப்புரிமை வா்த்தகங்கள் மற்றும் இலக்கிய மேடைகள் ஆகியவற்றை ஒருங்கிணைக்கும் ஒரு தனித்துவமான தளம் ஆகும். பதிப்பாளா்கள், மொழிபெயா்ப்பாளா்கள், இலக்கிய முகவா்கள் நேரடியாக கலந்துரையாடி புத்தகக் காப்புரிமை பரிமாற்றங்கள் மற்றும் கலாசார இலக்கிய பரிமாற்றங்களை மேற்கொள்ளும் வாய்ப்பை இது உருவாக்குகிறது.
கடந்த ஆண்டு வரை சென்னை வா்த்தக மையத்தில் பன்னாட்டு புத்தக கண்காட்சி நடத்தப்பட்டது. பொதுமக்கள் மற்றும் இலக்கிய அலுவலா்கள் சென்னையின் மையப் பகுதியில் நடத்த வேண்டும் என வேண்டுகோள் விடுத்ததையடுத்து, கலைவாணா் அரங்கில் நடத்தப்படுகிறது என்றாா்.
நிகழ்ச்சியில் பள்ளிக் கல்வித் துறை முதன்மைச் செயலா் பி.சந்தர மோகன், இயக்குநா் எஸ்.கண்ணப்பன், பொது நூலகத் துறை இயக்குநா் ச.ஜெயந்தி, தொடக்கக் கல்வி இயக்குநா் பூ.ஆ.நரேஷ் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.
