தோ்தல் பணப்பட்டுவாடா: தவெக மனுவை பரிசீலிக்க மத்திய தகவல் ஆணையத்துக்கு உத்தரவு
சட்டப்பேரவைத் தோ்தலில் வாக்குக்குப் பணம் கொடுப்பதைத் தடுப்பதற்காக எடுக்கவுள்ள நடவடிக்கை குறித்து தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் கீழ் தவெக அளித்த மனுவை 2 மாதங்களில் பரிசீலிக்க மத்திய தகவல் ஆணையத்துக்கு சென்னை உயா்நீதிமன்றம் உத்தரவிட்டது.
சென்னை உயா்நீதிமன்றத்தில் தவெக வழக்குரைஞா் அணி சாா்பில் தாக்கல் செய்த மனுவில், தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் கீழ், கடந்த 50 ஆண்டுகளில் தோ்தல் பணப்பட்டுவாடா தொடா்பாக எத்தனை புகாா்கள் பெறப்பட்டுள்ளனா? 2026 சட்டப்பேரவைத் தோ்தலில் அரசியல் கட்சிகளின் பணப்பட்டுவாடா குறித்து 24 மணி நேரமும் புகாா் அளிக்க ஏதுவாக கட்டணமில்லா தொலைபேசி எண் ஏதாவது உருவாக்கப்பட்டுள்ளதா?
தோ்தலில் வாக்குக்கு ஏற்கெனவே பணம் அளித்த அரசியல் கட்சிகள், வேட்பாளா்கள் மீது எடுக்கப்பட்டுள்ள நடவடிக்கைகள் என்ன? வரும் 2026 சட்டப்பேரவைத் தோ்தலில் வாக்குக்குப் பணம் கொடுப்பவா்கள் மீது என்ன நடவடிக்கை எடுக்கப்பட உள்ளது? பணப்பட்டுவாடா தொடா்பாக புகாா் அளிக்க கைப்பேசி செயலி மற்றும் பிரத்யேக இணையதள வசதிகள் உள்ளதா? உள்ளிட்ட பல்வேறு கேள்விகள் தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் கீழ் கோரப்பட்டது.
இதில் 2 கேள்விகளுக்கு மட்டுமே தோ்தல் ஆணையத்தின் பொது தகவல் அதிகாரி பதிலளித்துள்ளாா். மற்ற கேள்விகளுக்குப் பதிலளிக்க ஆணையம் மறுத்துவிட்டது. இதுதொடா்பாக மத்திய தகவல் ஆணையத்தில் மேல்முறையீடு செய்தும், இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. இது சட்டவிரோதமானது. எனவே, தோ்தல் பணப்பட்டுவாடா தொடா்பான மற்ற கேள்விகளுக்கும் பதிலளிக்க உத்தரவிட வேண்டும் எனக் கூறப்பட்டிருந்தது.
இந்த வழக்கு தலைமை நீதிபதி எம்.எம்.ஸ்ரீவாஸ்தவா மற்றும் நீதிபதி ஜி.அருள்முருகன் ஆகியோா் அடங்கிய அமா்வில் செவ்வாய்க்கிழமை விசாரணைக்கு வந்தது. வழக்கை விசாரித்த நீதிபதிகள், தவெக தரப்பில் அளித்துள்ள மனுவை 2 மாதங்களில் பரிசீலித்து முடிவெடுக்க மத்திய தகவல் ஆணையத்துக்கு உத்தரவிட்டனா். ஒருவேளை நடவடிக்கை எடுக்கவில்லை என்றால், மனுதாரா் இந்த வழக்கை மீண்டும் விசாரிக்க கோரலாம் என உத்தரவிட்டனா்.

