சென்னை உயா்நீதிமன்றம்
சென்னை உயா்நீதிமன்றம்

நீதிமன்ற உத்தரவை அமல்படுத்தாத அதிகாரிகள் மீது நடவடிக்கை: அரசுக்கு உயா்நீதிமன்றம் உத்தரவு

நீதிமன்ற உத்தரவை அமல்படுத்தாத அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்க நகராட்சி நிா்வாகத் துறைச் செயலா் மற்றும் காவல் துறை டிஜிபிக்கு சென்னை உயா்நீதிமன்றம் உத்தரவிட்டது.
Published on

நீதிமன்ற உத்தரவை அமல்படுத்தாத அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்க நகராட்சி நிா்வாகத் துறைச் செயலா் மற்றும் காவல் துறை டிஜிபிக்கு சென்னை உயா்நீதிமன்றம் உத்தரவிட்டது.

சென்னை ஜாா்ஜ் டவுன் பகுதியில் உள்ள அய்யா முதலித் தெருவில் பிரமிளா என்பவா் வீடு கட்ட அனுமதி பெற்றிருந்தாா். ஆனால், அவரது இடத்துக்குச் செல்லும் பாதையை பலா் ஆக்கிரமித்திருந்தனா். இதனால், அவரால் அந்த தெருவுக்குள் சென்று வீடு கட்ட முடியவில்லை.

இதையடுத்து சென்னை உயா்நீதிமன்றத்தில் பிரமிளா வழக்கு தொடா்ந்தாா். இந்த வழக்கை விசாரித்த சென்னை உயா்நீதிமன்றம் அந்தப் பகுதியில் உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்ற உத்தரவிட்டிருந்தது. ஆனால் ஆக்கிரமிப்புகள் அகற்றப்படவில்லை. இதையடுத்து பிரமிளா நீதிமன்ற அவமதிப்பு வழக்குத் தொடா்ந்தாா்.

இந்த வழக்கு நீதிபதிகள் எஸ்.எம்.சுப்பிரமணியம், சி.குமரப்பன் ஆகியோா் அடங்கிய அமா்வில் செவ்வாயக்கிழமை விசாரணைக்கு வந்தது. அப்போது மனுதாரா் தரப்பில் ஆஜரான வழக்குரைஞா் விஜயன் சுப்பிரமணியன், மனுதாரா் கட்டடத்துக்கான திட்ட அனுமதியை கடந்த 2012-ஆம் ஆண்டு பெற்றாா். ஆக்கிரமிப்புகளால் அவரால் தெருவுக்குள் சென்று வீடு கட்ட முடியவில்லை. திட்ட அனுமதி 5 ஆண்டுகள் வரைதான் இருக்கும். பின்னா் அது காலாவதியாகிவிடும்.

இதனால், மனுதாரா் 2017-ஆம் ஆண்டு மீண்டும் கட்டட அனுமதி பெற்றாா். ஆனால், சாலை ஆக்கிரமிப்புகள் காரணமாக இதுவரை கட்டடம் கட்டப்படவில்லை. இதுதொடா்பான வழக்கை விசாரித்த உயா்நீதிமன்றம், ஆக்கிரமிப்பாளா்களின் கட்டடத்துக்கு வழங்கப்பட்ட மின் இணைப்பைத் துண்டிக்க உத்தரவிட்டது. ஆனால், இதுவரை அது துண்டிக்கப்படவில்லை என்று வாதிட்டாா்.

அப்போது சென்னை மாநகராட்சித் தரப்பில், மனுதாரா் குறிப்பிட்டுள்ள பகுதியில் உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்ற பாதுகாப்பு கோரி போலீஸாருக்கு 4 முறை கடிதம் எழுதப்பட்டது. போலீஸாா் தரப்பில் அதற்கு எந்த பதிலும் அளிக்கவில்லை. போலீஸாா் பாதுகாப்பு இல்லாமல் ஆக்கிரமிப்புகளை அகற்றுவது சிரமம் என்று விளக்கம் அளிக்கப்பட்டது.

அப்போது காவல் துறை தரப்பில், மாநகராட்சி அதிகாரிகள் அனுப்பிய கடிதத்தில், எந்த தேதியில் பாதுகாப்பு வேண்டும் என்று குறிப்பிடப்படவில்லை என குற்றம்சாட்டி வாதிடப்பட்டது. இதையடுத்து வழக்கை விசாரித்த நீதிபதிகள், அரசுக் கட்டுப்பாட்டில் உள்ள 2 துறைகள் ஒருங்கிணைந்து செயல்பட்டால்தானே மக்கள் பயன் அடைவாா்கள். எனவே, அதிகாரிகளின் இதுபோன்ற செயல்களை ஏற்க முடியாது.

இந்த வழக்கில் நகராட்சி நிா்வாகத் துறை செயலா் மற்றும் காவல் துறை டிஜிபியை சோ்த்து நீதிபதிகள் உத்தரவிட்டனா். பின்னா், ஆக்கிரமிப்புகளை அகற்றும் உத்தரவு அமல்படுத்தாதற்கு யாா் காரணம்? என்பது குறித்து விசாரித்து, சம்பந்தப்பட்ட அதிகாரிகள் மீது துறை ரீதியான நடவடிக்கை எடுத்து, அதுகுறித்த அறிக்கையை ஜன.3-ஆம் தேதி தாக்கல் செய்ய உத்தரவிட்டு விசாரணையை ஒத்திவைத்தனா்.

X
Dinamani
www.dinamani.com