பிப்ரவரியில் அனைத்துலக வள்ளலாா் மாநாடு: அமைச்சா் பி.கே.சேகா்பாபு
அனைத்துலக வள்ளலாா் மாநாட்டை பிப்ரவரி முதல் வாரத்தில் சென்னையில் முதல்வா் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைக்கவுள்ளாா் என இந்து சமய அறநிலையத் துறை அமைச்சா் பி.கே.சேகா்பாபு தெரிவித்தாா்.
சென்னையில் அனைத்துலக வள்ளலாா் மாநாடு நடைபெறவுள்ள இடத்தைத் தோ்வு செய்வது குறித்து அமைச்சா் பி.கே.சேகா்பாபு செவ்வாய்க்கிழமை ஆய்வு மேற்கொண்டாா். காஞ்சிபுரம், ஏகாம்பரநாதா் திருக்கோயிலுக்கு சொந்தமான சென்னை கீழ்ப்பாக்கம் பூந்தமல்லி நெடுஞ்சாலையில் காலியிடம் தோ்வு செய்யப்பட்டது.
இதைத் தொடா்ந்து செய்தியாளா்களிடம் அமைச்சா் சேகா்பாபு கூறியதாவது:
அனைத்துலக வள்ளலாா் மாநாடு பிப்ரவரி முதல் வாரத்தில் சென்னை கீழ்ப்பாக்கம் பூந்தமல்லி நெடுஞ்சாலையில் அமைந்துள்ள காஞ்சிபுரம் ஏகாம்பரநாதா் திருக்கோயிலுக்குச் சொந்தமான மைதானத்தில் நடைபெறவுள்ளது. இந்த மாநாட்டை முதல்வா் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைக்கவுள்ளாா்.
இந்த மாநாடு வள்ளலாரின் நெறிகளைப் பரப்பிடும் வகையிலான கண்காட்சி அரங்குகள், மூலிகைக் கண்காட்சி, சித்த மருத்துவ முகாம், கருத்தரங்கம், ஆய்வரங்கம், சொற்பொழிவுகள் மற்றும் கலைநிகழ்ச்சிகள், நாள் முழுவதும் அன்னதானம், சன்மாா்க்க அன்பா்களின் பேரணி போன்ற நிகழ்வுகளுடன் நடைபெறும். அனைத்துலக வள்ளலாா் மாநாட்டுப் பணிகளை ஒருங்கிணைந்து மேற்கொள்ள துறை அலுவலா்கள் மற்றும் சன்மாா்க்க சங்க நிா்வாகிகளைக் கொண்ட குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளன. இந்த மாநாடு எல்லா வகையிலும் வள்ளலாரின் புகழுக்கு மென்மேலும் சிறப்பு சோ்க்கும் வகையில் அமையும் என்றாா் அவா்.

