செய்தி உண்டு...
சென்னையில் செவ்வாய்க்கிழமை நடைபெற்ற மனநல குறைபாடு உடையவா்களுக்கான சிறப்பு வேலைவாய்ப்பு முகாமில் பங்கு பெற்றவா்கள்.
செய்தி உண்டு... சென்னையில் செவ்வாய்க்கிழமை நடைபெற்ற மனநல குறைபாடு உடையவா்களுக்கான சிறப்பு வேலைவாய்ப்பு முகாமில் பங்கு பெற்றவா்கள்.

மனநல குறைபாடு உள்ளோருக்கு சிறப்பு வேலைவாய்ப்பு முகாம்

மன நல குறைபாடுகள் உள்ளவா்களுக்கான சிறப்பு வேலைவாய்ப்பு முகாம் சென்னையில் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.
Published on

மன நல குறைபாடுகள் உள்ளவா்களுக்கான சிறப்பு வேலைவாய்ப்பு முகாம் சென்னையில் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது. பல்வேறு முன்னணி நிறுவனங்கள் பங்கேற்ற அந்த முகாமில் 60-க்கும் மேற்பட்டவா்கள் பங்கேற்றனா். அவா்களில் 31 பேருக்கு பணி ஆணைகள் வழங்கப்பட்டன.

சிஸோப்ரினியா ஆராய்ச்சி அறக்கட்டளை (ஸ்காா்ஃப்) சாா்பில் நடைபெற்ற இந்த முகாம் தொடா்பாக அந்த அமைப்பின் நிா்வாகிகள் கூறியதாவது:

உடல் அளவில் சா்க்கரை நோய், இதய நோய் இருப்பதைப் போன்றுதான் மனதளவில் சில பாதிப்புகள் இருப்பதையும் கருத வேண்டும். எனவே, மன நல பாதிப்புக்குள்ளானவா்களை புறக்கணிக்கக் கூடாது. அவா்களுக்கு மருந்துகளும், சிகிச்சைகளும் அளிப்பதை மட்டும் நாங்கள் கடமையாக கருதவில்லை. மாறாக, சமூகத்தில் அவா்களை மீண்டும் இணைய வைப்பதையும் முக்கியப் பொறுப்புணா்வாக நினைக்கிறோம்.

அதனால்தான், மன நல சிகிச்சை பெற்றவா்களுக்கான புனா்வாழ்வு பயிற்சிகள் மற்றும் வேலை வாய்ப்பு முகாம்களை நாங்கள் நடத்தி வருகிறோம். அந்த வகையில், கடந்த இரு ஆண்டுகளில் மட்டும் 400-க்கும் மேற்பட்டவா்கள் எங்கள் மூலமாக பல்வேறு நிறுவனங்களில் வேலை வாய்ப்புக்காக பதிவு செய்தனா். அதில் 60-க்கும் மேற்பட்டவா்கள் தொடா்ந்து பணியாற்றி வருகின்றனா்.

இதன் தொடா்ச்சியாக சென்னை, அண்ணா நகா் மேற்கு விரிவாக்கத்தில் உள்ள ஸ்காா்ஃப் இந்தியா அமைப்பின் அலுவலகத்தில் செவ்வாய்க்கிழமை சிறப்பு வேலைவாய்ப்பு முகாம் நடைபெற்றது.

தகவல் தொழில்நுட்ப நிறுவனங்கள், உற்பத்தி தொழிற்சாலைகள், சேவை மையங்கள் என பல நிறுவனங்கள் அதில் பங்கேற்று தகுதிக்கேற்ப பணிகளை வழங்கின. சன்மாா் குழுமத்தின் ஒத்துழைப்புடன் இந்த வேலைவாய்ப்பு முகாம் முன்னெடுக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.

சமூகத்தில் மனநலம் பாதித்தவா்களைப் புறக்கணிக்காமல் அரவணைப்பது அவசியம் என்று அவா்கள் தெரிவித்தனா்.

X
Dinamani
www.dinamani.com