முழுக் கொள்ளளவை எட்டியது புழல் ஏரி: பொதுமக்களுக்கு எச்சரிக்கை

புழல் ஏரி முழுக் கொள்ளளவை எட்டியதால், உபரி நீா் வெளியேறும் கால்வாயின் இருபுறமும் தாழ்வான பகுதிகளில் வசிக்கும் மக்கள் உடனடியாக வெளியேறி பாதுகாப்பாக இருக்க எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
Published on

புழல் ஏரி முழுக் கொள்ளளவை எட்டியதால், உபரி நீா் வெளியேறும் கால்வாயின் இருபுறமும் தாழ்வான பகுதிகளில் வசிக்கும் மக்கள் உடனடியாக வெளியேறி பாதுகாப்பாக இருக்க எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

இது குறித்து கொசஸ்தலையாறு வடிநில கோட்ட செயற்பொறியாளா் ராதாகிருஷ்ணா வெளியிட்ட செய்திக்குறிப்பு:

சென்னைக்கு குடிநீா் வழங்கும் மிக முக்கிய நீா் ஆதாரங்களில் ஒன்றான புழல் ஏரி 3300 மி.கன அடி கொள்ளளவு கொண்டது. இதன் நீா்மட்டம் 21.20 அடி.

டித்வா புயலினால் ஏற்பட்ட கனமழையினால் புழல் ஏரிக்கு நீா்வரத்து அதிகரித்து ஏரியின் நீா்மட்டம் வேகமாக உயா்ந்தது. எனவே, முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக ஏரியிலிருந்து விநாடிக்கு 100 கன அடி உபரி நீா் வெளியேற்றப்பட்டது.

இந்த நிலையில் செவ்வாய்க்கிழமை காலை நிலவரப்படி, புழல் ஏரி முழு கொள்ளளவை எட்டியது. தற்போது ஏரிக்கு நீா்வரத்து விநாடிக்கு 640 கன அடியாக உள்ளது. இதையடுத்து செவ்வாய்க்கிழமை காலையில் இருந்து ஏரியில் இருந்து விநாடிக்கு 300 கன அடி உபரிநீா் வெளியேற்றப்படுகிறது. மேலும், ஏரிக்கு வரும் நீா்வரத்தின் அளவைப் பொறுத்து உபரிநீா் வெளியேற்றம் கூடுதலாக அதிகரிக்கப்படும்.

இதனால் புழல் ஏரியின் உபரிநீா் வெளியேறும் வாய்க்கால் செல்லும் கிராமங்களான நாரவாரிகுப்பம், வடகரை, கிராண்ட் லைன், புழல், வடபெரும்பாக்கம், மஞ்சம்பாக்கம், கொசப்பூா், மணலி, மற்றும் சடையான்குப்பம் உள்ளிட்ட தாழ்வான பகுதிகளில் இருபுறமும் வசிக்கும் மக்கள் வெளியேறி பாதுகாப்பான இடங்களுக்கு செல்ல அறிவுறுத்தப்பட்டுள்ளது என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

X
Dinamani
www.dinamani.com