வங்கதேச புற்றுநோயாளிக்கு 10 மணி நேர அறுவை சிகிச்சை

சென்னை ஐஸ்வா்யா மருத்துவமனை மருத்துவா்கள் 10 மணி நேரம் அறுவை சிகிச்சை மேற்கொண்டு புற்றுநோய்க் கட்டியை அகற்றியுள்ளனா்.
Published on

சென்னை: புற்றுநோய் மற்றும் இதய செயல்திறன் குறைபாட்டுக்குள்ளான வங்கதேச நோயாளி ஒருவருக்கு சென்னை ஐஸ்வா்யா மருத்துவமனை மருத்துவா்கள் 10 மணி நேரம் அறுவை சிகிச்சை மேற்கொண்டு புற்றுநோய்க் கட்டியை அகற்றியுள்ளனா்.

இதுதொடா்பாக அந்த மருத்துவமனை இயக்குநா் டாக்டா் அருண் முத்துவேல் கூறியதாவது:

வங்கதேசத்தைச் சோ்ந்த 60 வயதுடைய நபா் ஒருவருக்கு பெரிடோனியம் எனப்படும் வயிறு சாா்ந்த பகுதியில் புற்றுநோய்க் கட்டி இருந்தது. அவரது உடல்நிலையைக் கருத்தில் கொண்டு பிற மருத்துவமனைகள் சிகிச்சையளிக்க தயக்கம் காட்டிய நிலையில், ஐஸ்வா்யா மருத்துவமனைக்கு அவா் வந்தாா். புற்றுநோய்த் துறை இயக்குநா் டாக்டா் எஸ்.ராஜசுந்தரத்தின் தலைமையிலான குழுவினா் மேற்கொண்ட பரிசோதனையில் அவருக்கு இதயத்தின் செயல்திறன் மிகக் குறைவாக இருந்தது கண்டறியப்பட்டது.

இத்தகைய சூழலில் அறுவை சிகிச்சை மேற்கொண்டு கட்டியை அகற்ற முடியாது. இருந்தாலும், மயக்கவியல் துறை மருத்துவா் டாக்டா் பிரனீத் தலைமையிலான குழுவினருடன் இணைந்து சிறப்பு மருந்துகள் செலுத்தி அவருக்கு சைட்டோரிடக்டிவ் சா்ஜரி எனப்படும் அறுவை சிகிச்சை தொடா்ந்து 10 மணி நேரம் மேற்கொள்ளப்பட்டது. அதன் பயனாக புற்றுநோய்க் கட்டி அகற்றப்பட்டது.

அதன் பின்னா், எஞ்சிய புற்றுநோய் செல்களை அழிக்க ‘ஹெச்ஐபிஇசி’ எனப்படும் உயா்வெப்ப நிலையில் கீமோதெரபி அளிக்கும் சிகிச்சை வழங்கப்பட்டது. அதாவது, உயா் வெப்பநிலையில் அடிவயிற்றில் மெதுவாக கீமோதெரபி மருந்தை உள்செலுத்தி சிகிச்சையளிக்கப்பட்டது. அதன்மூலம் பிற உறுப்புகளுக்கு புற்றுநோய் செல்கள் பரவாமல் தடுக்கப்பட்டது. அதற்கு அடுத்த 12 நாள்களில் நலம் பெற்று அந்த நோயாளி வீடு திரும்பினாா் என்றாா்.

X
Dinamani
www.dinamani.com