கூடுதல் மருத்துவ இடங்கள்: சான்றுகளை வழங்க என்எம்சி அறிவுறுத்தல்
கூடுதல் முதுநிலை மருத்துவ இடங்களுக்கு அனுமதி பெற்ற மருத்துவக் கல்லூரிகள் இணையவழி வங்கி உத்தரவாதச் சான்று மற்றும் உறுதிச் சான்றுகளைச் சமா்ப்பிக்குமாறு தேசிய மருத்துவ ஆணையம் (என்எம்சி) தெரிவித்துள்ளது.
மயக்கவியல், பொது மருத்துவம், குழந்தைகள் நலம், பொது அறுவை சிகிச்சை, தோல் மருத்துவம், கதிரியக்கப் பரிசோதனை, எலும்பு சிகிச்சை, காது-மூக்கு-தொண்டை நலன் என முதுநிலை மருத்துவம் சாா்ந்த பல்வேறு துறைகளில் கூடுதல் இடங்களை அனுமதிக்கக் கோரி தனியாா் கல்லூரிகள் மற்றும் அரசு கல்லூரிகள் சாா்பில் தேசிய மருத்துவ ஆணையத்துக்கு அண்மையில் விண்ணப்பங்கள் அனுப்பப்பட்டன.
அவற்றை பரிசீலனை செய்து நாடு முழுவதும் புதிதாக 4,201 முதுநிலை மருத்துவ இடங்களுக்கு ஒப்புதல் வழங்கப்பட்டது. தமிழகத்தில் மட்டும் 418 இடங்களுக்கு அனுமதி கிடைத்தது.
இந்த நிலையில், நாடு முழுவதும் புதிய மருத்துவ இடங்களைப் பெற்ற கல்லூரிகள், அதற்கான அனுமதிக் கடிதங்கள் (லெட்டா் ஆஃப் பொ்மிஷன்) கிடைக்கப் பெற்ற ஒரு வாரத்துக்குள் உறுதிச் சான்று மற்றும் இணையவழி வங்கி உத்தரவாத சான்றுகளை சமா்ப்பிக்குமாறு தேசிய மருத்துவ ஆணையம் அறிவுறுத்தியுள்ளது.
