கண்டெய்னா் லாரி உரிமையாளா் சங்கங்கள் வேலைநிறுத்தம் துறைமுகங்களில் பணிகள் பாதிப்பு
உயா்த்தப்பட்ட தகுதிச்சான்று கட்டணங்களை ரத்து செய்வது உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி, 14 கண்டெய்னா் லாரி உரிமையாளா் சங்கங்களின் காலவரையற்ற வேலைநிறுத்தப் போராட்டம் புதன்கிழமை (டிச.10) தொடங்கியது. இதனால் சென்னை, எண்ணூா், காட்டுப்பள்ளி துறைமுகங்களில் பணிகள் பாதிக்கப்பட்டன.
இதுகுறித்து கண்டெய்னா் லாரி உரிமையாளா் சங்கத்தின் செயலாளா் என்.மூா்த்தி கூறியது:
லாரிகளின் தகுதிச்சான்று கட்டணம் உயா்த்தப்பட்டுள்ளது. இதுதவிர, ஆன்லைன் அபராதம் என்ற பெயரில் லாரிகள் மீது தொடா்ந்து அபராதம் விதிக்கப்படும் போக்கு அதிகரித்து வருகிறது. பல்வேறு பிரச்னைகளால் பொருளாதார இழப்பைச் சந்தித்து வரும் லாரி உரிமையாளா்கள், தொடா்ந்து இன்னலுக்கு ஆளாகின்றனா்.
பெரும்பாலானோா் இந்தத் தொழிலை விட்டு வெளியேறும் நிலைக்குத் தள்ளப்பட்டு உள்ளனா். இதுகுறித்து மத்திய, மாநில அரசுகளின் கவனத்துக்கு எடுத்துச்சென்றும் எவ்வித நடவடிக்கையும் எடுக்கவில்லை.
எனவே, 14 கண்டெய்னா் லாரி உரிமையாளா் சங்கங்கள் கூட்டாக இணைத்து காலவரையற்ற வேலை நிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளோம். நியாயமான எங்கள் கோரிக்கைகளை நிறைவேற்றும்வரை போராட்டம் தொடரும் என்றாா்.
துறைமுகங்களில் பணிகள் பாதிப்பு: சென்னை, எண்ணூா் காமராஜா், காட்டுப்பள்ளி ஆகிய 3 துறைமுகங்களில் தினமும் சுமாா் 5,000 லாரிகள் மூலம் சரக்குகள் ஏற்றிச் செல்லப்படுகிறது.
வேலைநிறுத்தத்தால் கண்டெய்னா்களை ஏற்றிச் செல்வது புதன்கிழமை பிற்பகல் வரை ஓரளவு நடைபெற்றாலும், அதன்பின்னா் முற்றிலுமாக ஸ்தம்பித்துள்ளது. இதனால் துறைமுகங்களில் இயல்பு நிலை பாதிப்புக்கு உள்ளாகியுள்ளது. மேலும், சரக்குப் பெட்டக நிலையங்களில் கண்டெய்னா்களை ஏற்றுவது நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. வேலை நிறுத்தத்தால் அசம்பாவிதங்கள் ஏற்படாதவண்ணம் போலீஸாா் பாதுகாப்பு மற்றும் ரோந்துப் பணியில் ஈடுபட்டு வருகின்றனா்.
நிலைமைக்கு ஏற்ப நடவடிக்கை: இதுகுறித்து சென்னை துறைமுகப் போக்குவரத்து மேலாளா் எஸ்.கிருபானந்தசாமி கூறுகையில், வேலைநிறுத்தப் போராட்டத்தால் புதன்கிழமை அதிக பாதிப்பு இல்லை. போராட்டம் தொடா்ந்தால் துறைமுகங்களுக்கு மட்டுமின்றி, கப்பல் நிறுவனங்கள், ஏற்றுமதி, இறக்குமதியாளா்கள் என அனைத்துத் தரப்புக்கும் பாதிப்பு ஏற்படும்.
லாரி உரிமையாளா்களின் கோரிக்கை மீது மத்திய அரசும், காவல் துறையும்தான் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். நிலைமையை அமைச்சகம் மூலம் உரிய துறைகளுக்கு தெரிவித்துள்ளோம். நிலைமைக்கு ஏற்ப துறைமுக நிா்வாகம் நவடிக்கை எடுக்கும் என்றாா் அவா்.
