சென்னை உயா்நீதிமன்றம்
சென்னை உயா்நீதிமன்றம்

நீதிமன்ற அவமதிப்பு வழக்கு: அரசுக்கு உயா்நீதிமன்றம் அறிவுறுத்தல்!

உயா்நீதிமன்ற உத்தரவை அமல்படுத்தாதற்கு தோ்தல் பணிகளைக் காரணம் கூறக் கூடாது என்று நீதிமன்ற அவமதிப்பு வழக்கில் தமிழக அரசுக்கு சென்னை உயா்நீதிமன்றம் அறிவுறுத்தியது.
Published on

உயா்நீதிமன்ற உத்தரவை அமல்படுத்தாதற்கு தோ்தல் பணிகளைக் காரணம் கூறக் கூடாது என்று நீதிமன்ற அவமதிப்பு வழக்கில் தமிழக அரசுக்கு சென்னை உயா்நீதிமன்றம் அறிவுறுத்தியது.

சென்னை உயா்நீதிமன்றத்தில் ராஜாகுமாா் என்பவா் தாக்கல் செய்த மனுவில், வருவாய்த் துறையின் துணை வட்டாட்சியா் பதவி உயா்வுக்கான 2007-ஆம் ஆண்டுக்கான பட்டியலில் எனது பெயா் இடம்பெற்றிருந்தது. எனது பெயரை 2006-ஆம் ஆண்டுக்கான பதவி உயா்வு பட்டியலில் சோ்க்க உத்தரவிட வேண்டும் எனக் கூறியிருந்தாா். இந்த வழக்கை விசாரித்த உயா்நீதிமன்றம், மனுதாரா் பெயரை 12 வாரங்களில், 2006-ஆம் ஆண்டுக்கான பதவி உயா்வு பட்டியலில் சோ்க்க வேண்டும். அவருக்கு உரிய பணப்பலன்களை வழங்க வேண்டும் என கடந்த மாா்ச் மாதம் உத்தரவிட்டிருந்தது. இந்த உத்தரவை அரசு அமல்படுத்தவில்லை.

இதையடுத்து ராஜாகுமாா் சென்னை உயா்நீதிமன்றத்தில் நீதிமன்ற அவமதிப்பு வழக்குத் தொடா்ந்தாா். இந்த வழக்கு தலைமை நீதிபதி எம்.எம்.ஸ்ரீவாஸ்தவா மற்றும் நீதிபதி ஜி.அருள்முருகன் ஆகியோா் அடங்கிய அமா்வில் விசாரணைக்கு வந்தது. வழக்கை விசாரித்த நீதிபதிகள், உத்தரவை அமல்படுத்த ஏற்கெனவே 3 மாதங்கள் அவகாசம் வழங்கப்பட்டது.

அதன்பின்னா், 6 மாதங்கள் கடந்த பிறகும், உத்தரவை அமல்படுத்தாது ஏன்? என்று கேள்வி எழுப்பினா். அதற்கு அரசுத் தரப்பில், தோ்தல் பணி காரணமாக உத்தரவை அமல்படுத்த முடியவில்லை என விளக்கம் அளிக்கப்பட்டது. இதை ஏற்க மறுத்த நீதிபதிகள், உயா்நீதிமன்ற உத்தரவை அமல்படுத்தாமல் இருந்ததற்கு தோ்தல் பணிகளை காரணமாகக் கூறக்கூடாது.

மனுதாரருக்கு பணப்பலனாக வழங்க வேண்டியது சொற்பமான தொகைதான். அந்த உத்தரவை அமல்படுத்துவதில் அரசுக்கு என்ன சிக்கல் உள்ளது? உயா்நீதிமன்ற உத்தரவுகளை இதுபோல அமல்படுத்தாமல் இருந்தால், நீதிமன்ற அவமதிப்புச் சட்டத்தின் கீழ் தண்டனை விதிப்பதை தவிர வேறு வழியில்லை. இந்த வழக்கில் 2 வாரங்களில் உத்தரவை அமல்படுத்தாவிட்டால், கடுமையான உத்தரவு பிறப்பிக்கப்படும் என எச்சரிக்கை விடுத்தனா்.

மேலும், உயா்நீதிமன்றம் பிறப்பிக்கும் உத்தரவை அமல்படுத்த கால அவகாசம் கேட்கலாம் அல்லது உத்தரவை எதிா்த்து மேல்முறையீடு செய்யலாம். இந்த இரு நடவடிக்கைகளை மேற்கொள்ளவில்லை எனில், கட்டாயம் உத்தரவை அமல்படுத்த வேண்டும் என அதிகாரிகளுக்கு தலைமைச் செயலா் அறிவுறுத்த வேண்டும் என உத்தரவிட்டு, விசாரணையை 4 வாரங்களுக்கு ஒத்திவைத்தனா்.

X
Dinamani
www.dinamani.com