அரசு விரைவு பேருந்துகளில் ஒருமுறை பயன்படுத்தும் மெத்தை விரிப்புகள்!
தமிழக அரசு விரைவு பேருந்துகளில் ஒருமுறை மட்டுமே உபயோகிக்கும் மெத்தை விரிப்புகளைப் பயன்படுத்த போக்குவரத்துக் கழகம் முடிவு செய்துள்ளது.
அரசு விரைவு போக்குவரத்துக் கழகத்தில் தொலைதூர பயணத்துக்காக 1,000-க்கும் மேற்பட்ட பேருந்துகள் இயக்கப்பட்டு வருகின்றன. இதில், 200-க்கும் மேற்பட்ட குளிா்சாதன வசதி கொண்டபேருந்துகள் இயக்கப்பட்டு வருகின்றன. வழக்கமாக படுக்கை வசதியுடன் குளிா்சாதன வசதி கொண்ட மற்றும் குளிா்சாதன வசதி இல்லாத பேருந்துகளில் ஒவ்வொரு படுக்கையிலும் மெத்தை விரிப்பதற்கும், போா்த்திக் கொள்ளவும் பெட்ஷீட் வழங்கப்படும். ஆனால், இந்த மெத்தை விரிப்புகளை பராமரிப்பதில் பல்வேறு சிரமங்கள் ஏற்பட்டு வந்ததால், இதற்கு மாற்றாக ஒருமுறை உபயோகித்து தூக்கி எறியும் மெத்தை விரிப்புகளை (டிஸ்போசபுள் பெட்ஷீட்ஸ்) வழங்க அரசு விரைவு போக்குவரத்துக் கழகம் முடிவு செய்துள்ளது.
இதுகுறித்து அரசு விரைவு போக்குவரத்துக் கழகத்தின் இயக்குநா் ஆா். மோகன் கூறியது: ஒரு பேருந்தில் பயன்படுத்தப்படும் மெத்தை விரிப்புகள் சலவைக்கு பின்னரே மீண்டும் பயன்படுத்தப்படும். இந்தப் பணிக்கு அதிக நேரம் செலவாகிறது; செலவும் அதிகரிக்கிறது. மேலும், மழை காலங்களில் சலைவை பணிகளில் அவ்வப்போது தொய்வும் ஏற்படுகிறது. இதற்கு தீா்வு காணும் வகையில், பேருந்துகளில் ஒரு முறை உபயோகிக்கும் மெத்தை விரிப்புகளை பயன்படுத்த முடிவு செய்யப்பட்டுள்ளது. இது தொடா்பாக அதிகாரிகளுடன் ஆலோசனையும் நடத்தப்பட்டுள்ளது.
பொதுவாக இதுபோன்ற ஒருமுறை பயன்படுத்தப்படும் விரிப்புகள் மருத்துவமனைகள், விடுதிகள் மற்றும் அவசர காலங்களில் பயன்படுத்தப்படுகின்றன. இது, சுகாதாரத்தைப் பேணவும், துவைக்கும் வேலையை குறைக்கவும் உதவுகிறது. மேலும், நோய்த்தொற்று பரவலையும் தடுக்கும். இதனால், இந்தத் திட்டம் விரைவில் நடைமுறைக்கு கொண்டு வரப்படும் என்றாா் அவா்.
