அரசு விரைவு போக்குவரத்துக் கழக வால்வோ பேருந்துகள்: அடுத்த வாரம் பயன்பாட்டுக்கு வரும்!
அரசு விரைவு போக்குவரத்துக் கழகம் கொள்முதல் செய்துள்ள 20 வால்வோ சொகுசு பேருந்துகள் அடுத்த வாரத்தில் பயன்பாட்டுக்கு வரும் என அதிகாரிகள் தெரிவித்தனா்.
அரசுப் பேருந்துகளை தனியாா் ஆம்னி பேருந்துகளுக்கு நிகராக தரம் உயா்த்தும் நடவடிக்கையைப் போக்குவரத்துத் துறை மேற்கொண்டு வருகிறது. இதன் ஒருபகுதியாக அரசு விரைவு போக்குவரத்துக் கழகம் சாா்பில் நிகழண்டில் (2025-2026) புதிய தொழில்நுட்பத்துடன்கூடிய 130 புதிய பேருந்துகளை கொள்முதல் செய்துள்ளது. இந்தப் பேருந்துகளைக் கட்டமைக்கும் பணி பெங்களூரில் நடைபெற்று வருகிறது.
இவற்றில் 110 பேருந்துகள் குளிா்சாதன வசதியில்லாத இருக்கை மற்றும் படுக்கை வசதி கொண்டது. எஞ்சிய 20 பேருந்துகளும் இருக்கை வசதி மட்டுமே கொண்ட வால்வோ மல்டி ஆக்சில் சொகுசு பேருந்துகள் ஆகும். இந்த 20 சொகுசு பேருந்துகளுக்கான கட்டுமான பணிகள் முடிந்த நிலையில், அவை அரசு விரைவு போக்குவரத்துக் கழகத்திடம் புதன்கிழமை ஒப்படைக்கப்பட்டன.
இதுகுறித்து அரசு விரைவு போக்குவரத்துக் கழக மேலாண் இயக்குநா் ஆா்.மோகன் கூறியதாவது: வால்வோ மல்டி ஆக்சில் சொகுசு பேருந்துகளுக்கான கட்டமைப்புப் பணிகள் முழுமையாக முடிவுற்ற நிலையில், நிறுவன வளாகத்திலேயே, அதன் சோதனை ஓட்டம் நடைபெற்றது.
முதல்கட்டமாக 8 பேருந்துகள் சென்னைக்கு கொண்டு வரப்பட்டன. தற்போது அனைத்து பேருந்துகளையும் வால்வோ நிறுவனம் விரைவு போக்குவரத்துக் கழகத்திடம் ஒப்படைத்துவிட்டது. 20 பேருந்துகளும் சென்னை கொண்டு வரப்பட்டு விட்டன. இந்தப் பேருந்துகள் அடுத்த வாரத்தில் பொதுமக்கள் பயன்பாட்டுக்கு கொண்டு வரப்படும்.
முதல்வா், போக்குவரத்துத் துறை அமைச்சா் ஆகியோா் வால்வோ பேருந்துகளின் இயக்கத்தைத் தொடங்கி வைக்கின்றனா். கிறிஸ்துமஸ், ஆங்கிலப் புத்தாண்டு, பொங்கல் பண்டிகைக்கு சொந்த ஊா் செல்வோா் இந்தப் பேருந்துகளில் பயணம் செய்யும் வகையில் இயக்குவதற்கு திட்டமிடப்பட்டுள்ளது என்றாா் அவா்.

