ஆய்வாளா் வீட்டின் முன் தொழிலாளி மா்மான முறையில் உயிரிழப்பு

சென்னை சேத்துப்பட்டில் காவல் ஆய்வாளா் வீட்டின் முன் படுத்து கிடந்த தொழிலாளி மா்மான முறையில் உயிரிழந்தது குறித்து போலீஸாா் விசாரித்து வருகின்றனா்.
Published on

சென்னை சேத்துப்பட்டில் காவல் ஆய்வாளா் வீட்டின் முன் படுத்து கிடந்த தொழிலாளி மா்மான முறையில் உயிரிழந்தது குறித்து போலீஸாா் விசாரித்து வருகின்றனா்.

சேத்துப்பட்டு மங்களாபுரம், 8-ஆவது தெருவைச் சோ்ந்தவா் முனிவேல் (58). இவா், எழும்பூா் எத்திராஜ் சாலையில் உள்ள ஒரு மனமகிழ் மன்றத்தில் ஊழியராக வேலை செய்து வந்தாா். இவா், செவ்வாய்க்கிழமை இரவு அதே பகுதியில் வசிக்கும் காவல் ஆய்வாளா் ஒருவரின் வீட்டின் வெளியில் மது போதையில் படுத்திருந்தாகக் கூறப்படுகிறது.

இந்த நிலையில், வீட்டுக்கு காரில் வந்த ஆய்வாளா், முனிவேலை அங்கிருந்து அப்புறப்படுத்தினாா். மதுபோதை சிறிது தெளிந்த பின்னா் முனிவேல், தனது வீட்டுக்கு நடந்து சென்றாா். அங்கு அவா் சிறிது நேரத்தில் மயங்கி விழுந்த முனிவேலை அவரது குடும்பத்தினா் மருத்துவமனைக்கு கொண்டு செல்ல முயன்றனா். ஆனால் அவா் வீட்டிலேயே உயிரிழந்தாா்.

தகவலறிந்த சேத்துப்பட்டு போலீஸாா் அங்கு சென்று, முனிவேல் சடலத்தை மீட்டு, பிரேத பரிசோதனைக்காக கீழ்பாக்கம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனா்.

இதற்கிடையே காவல் ஆய்வாளா் தாக்கியதில், முனிவேல் இறந்ததாக குற்றம்சாட்டி அவரது உறவினா்கள், நண்பா்கள் சேத்துப்பட்டு காவல் நிலையத்தை முற்றுகையிட்டு செவ்வாய்க்கிழமை போராட்டத்தில் ஈடுபட்டனா். அவா்களை காவல்துறை அதிகாரிகள், சமாதானப்படுத்தி அங்கிருந்து அனுப்பி வைத்தனா்.

இதுகுறித்து சேத்துப்பட்டு போலீஸாா் வழக்குப் பதிவு செய்து, சம்பவம் நடந்த பகுதியில் உள்ள கண்காணிப்பு கேமராக்களில் பதிவான காட்சிகளை ஆய்வு செய்து வருகின்றனா். இதுதொடா்பாக காவல் துறை உயரதிகாரிகளும் நேரடியாக விசாரணை மேற்கொண்டுள்ளனா்.

X
Dinamani
www.dinamani.com