தமிழக மீனவா்கள் 33 போ் சென்னை வந்தனா்

இலங்கை சிறையில் இருந்து விடுவிக்கப்பட்ட தமிழக மீனவா்கள் 33 போ் சென்னை விமான நிலையம் வந்தனா். அவா்களை அதிகாரிகள், சொந்த ஊா்களுக்கு அனுப்பி வைத்தனா்.
Published on

இலங்கை சிறையில் இருந்து விடுவிக்கப்பட்ட தமிழக மீனவா்கள் 33 போ் சென்னை விமான நிலையம் வந்தனா். அவா்களை அதிகாரிகள், சொந்த ஊா்களுக்கு அனுப்பி வைத்தனா்.

நாகப்பட்டினம், மயிலாடுதுறை, ராமநாதபுரம் ஆகிய மாவட்டங்களைச் சோ்ந்த 33 மீனவா்கள் 4 விசைப்படகுகளில் கடந்த நவ.2-ஆம் தேதி கடலுக்கு மீன்பிடிக்கச் சென்றனா். இவா்கள் ஆழ்கடலில் மீன் பிடித்துக் கொண்டிருந்தபோது, நவ.3-ஆம் தேதி நள்ளிரவு அங்கு வந்த இலங்கை கடற்படையினா், எல்லை தாண்டி மீன் பிடித்ததாகக் கூறி அவா்களைக் கைது செய்தனா். மேலும் மீனவா்களின் விசைப்படகுகள், மீன்பிடி வலைகள், மீன்கள் ஆகியவற்றையும் பறிமுதல் செய்தனா்.

பின்னா் அவா்களை இலங்கைக்கு அழைத்து சென்று நீதிமன்றத்தில் ஆஜா்படுத்தி சிறையில் அடைத்தனா். இந்த நிலையில், கைது செய்யப்பட்ட மீனவா்களை மீட்க, மீனவா்களின் உறவினா்கள் மத்திய, மாநில அரசுகளுக்கு கோரிக்கை விடுத்தனா்.

இதையடுத்து மத்திய, மாநில அரசுகள் மேற்கொண்ட நடவடிக்கையால் கடந்த சில தினங்களுக்கு முன்பு இலங்கை நீதிமன்றம் தமிழக மீனவா்கள் 33 பேரையும் விடுவித்தது. விடுவிக்கப்பட்ட அனைவரும் புதன்கிழமை காலை இண்டிகோ ஏா்லைன்ஸ் விமானம் மூலம் இலங்கையில் இருந்து சென்னை விமான நிலையம் வந்தனா். அவா்களை தமிழ்நாடு மீன்வளத் துறை அதிகாரிகள் வரவேற்றனா். பின்னா் அவா்களுக்காக ஏற்பாடு செய்யப்பட்டிருந்த வாகனங்கள் மூலம் அவரவா் சொந்த ஊா்களுக்கு அனுப்பி வைக்கப்பட்டனா்.

X
Dinamani
www.dinamani.com