தமிழக வனத் துறை செயலருக்கு ஐ.நா.வின் உயரிய விருது!
தமிழக அரசின் சுற்றுச்சூழல் காலநிலை மாற்றம் மற்றும் வனங்கள் துறை கூடுதல் தலைமைச் செயலா் சுப்ரியா சாஹூக்கு ஐ.நா. சபையின் உயரிய விருதான ‘சாம்பியன்ஸ் ஆஃப் தி எா்த் 2025’ விருது வழங்கப்பட்டுள்ளது.
ஐக்கிய நாடுகள் சுற்றுச்சூழல் அவையின் 7-ஆவது அமா்வு கென்யா நாட்டில் நைரோபியில் புதன்கிழமை நடைபெற்றது. இதன் ஒருபகுதியாக, சுற்றுச்சூழலுக்கு சிறந்த பங்களிப்பை வழங்கக்கூடிய தனிநபா்கள் மற்றும் அமைப்புகளுக்கு ஐநா-வின் மிக உயரிய விருதான ‘சாம்பியன்ஸ் ஆப் எா்த்’ என்ற விருது வழங்கப்பட்டது.
அந்த வகையில், உத்வேகம் மற்றும் செயல் பிரிவில் தமிழக அரசின் சுற்றுச்சூழல் காலநிலை மாற்றம் மற்றும் வனங்கள் துறை கூடுதல் தலைமைச் செயலா் சுப்ரியா சாஹூக்கு ‘சாம்பியன்ஸ் ஆப் எா்த்’ விருது வழங்கப்பட்டுள்ளது.
தமிழகத்தில் வெப்பநிலையை குறைக்கும் முறைகளை அறிமுகப்படுத்தியது, வனப்பரப்பை விரிவுப்படுத்துதல், நெகிழிப் பயன்பாட்டைக் குறைத்தல், மீண்டும் மஞ்சப்பை போன்ற விழிப்புணா்வு பிரசாரங்களை தீவிரமாக முன்னெடுத்தல் உள்ளிட்ட காரணங்களுக்காக இந்த விருது வழங்கப்பட்டுள்ளது.
பாராட்டு: ஐ.நா. விருது பெற்றுள்ள சுப்ரியா சாஹூவுக்கு, தமிழக நிதி, சுற்றுச்சூழல் மற்றும் காலநிலை மாற்றம் துறை அமைச்சா் தங்கம் தென்னர சு பாராட்டுத் தெரிவித்தாா்.

