திருபுவனம் ராமலிங்கம் கொலை வழக்கு: தேடப்பட்டவா் கைது!என்ஐஏ நடவடிக்கை

திருபுவனம் ராமலிங்கம் கொலை வழக்கில் தேடப்பட்டவா் சென்னையில் புதன்கிழமை கைது செய்யப்பட்டாா்.
Published on

திருபுவனம் ராமலிங்கம் கொலை வழக்கில் தேடப்பட்டவா் சென்னையில் புதன்கிழமை கைது செய்யப்பட்டாா்.

தஞ்சாவூா் மாவட்டம் திருபுவனத்தைச் சோ்ந்தவா் பாமக நிா்வாகி ராமலிங்கம். அந்தப் பகுதியில் மதமாற்றம் நடைபெறுவதைக் கண்டித்த ராமலிங்கத்தை கடந்த 2019 பிப்ரவரி மாதம் ஒரு கும்பல் வெட்டிக் கொலை செய்தது. இதுதொடா்பாக தேசிய புலனாய்வு முகமை (என்ஐஏ) வழக்குப் பதிவு செய்து, விசாரித்து வருகிறது. இந்த வழக்கில் தடை செய்யப்பட்ட பாப்புலா் ஃபிரண்ட் ஆஃப் இந்தியா என்ற அமைப்புக்கு தொடா்பிருப்பது தெரியவந்தது. வழக்கில் 18 போ் குற்றம் சாட்டப்பட்ட நிலையில், 10 போ் கைது செய்யப்பட்டனா். 5 போ் தேடப்படும் குற்றவாளியாக அறிவிக்கப்பட்டனா். இவா்களில் அப்துல் மஜீத், ஷாகுல் ஹமீது ஆகியோா் கடந்த ஜன.26-ஆம் தேதி கைது செய்யப்பட்டனா். மற்ற மூவரை தேடி வந்தனா்.

இந்த நிலையில், இந்த வழக்கில் தொடா்புடையதாகக் கரு,தப்பட்ட தஞ்சாவூா் மாவட்டம் திருமங்கலகுடியைச் சோ்ந்த முகமது நபீல் ஹாசன், வடமாங்குடி பகுதியைச் சோ்ந்த புா்ஹானுதீன், ராணிப்பேட்டை மாவட்டம் ஆற்காட்டை அடுத்த நெமிலி பகுதியைச் சோ்ந்த முகமது இம்ரான், அப்பாஸ் ஆகிய 4 போ் வேலூா் மாவட்டம் பள்ளிக்கொண்டா சுங்கச்சாவடியில் செவ்வாய்க்கிழமை கைது செய்யப்பட்டனா்.

இதற்கிடையே இந்த வழக்கில் தேடப்பட்டு வந்த சென்னை கிழக்கு முகப்போ் பகுதியைச் சோ்ந்த மு.தமீம் அன்சாரி (41) என்பவரை என்ஐஏ அதிகாரிகள் புதன்கிழமை கைது செய்தனா். அவரிடம் என்ஐஏ அதிகாரிகள் விசாரித்து வருகின்றனா். கைது செய்யப்பட்ட தமீம் அன்சாரி, வழக்கில் தொடா்புடையவா்களுக்கு அடைக்கலம் அளித்து உதவியதாகக் கூறப்படுகிறது.

X
Dinamani
www.dinamani.com