பயணிகள் ஆட்டோக்களில் சரக்குகளை ஏற்றினால் நடவடிக்கை போக்குவரத்துத் துறை எச்சரிக்கை
பயணிகளுக்கான ஆட்டோக்களில் சரக்குகளை ஏற்றிச் சென்றால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என போக்குவரத்துத் துறை எச்சரிக்கை விடுத்துள்ளது.
தமிழகம் முழுவதும் சொந்த பயன்பாட்டுக்கான வாகனங்களை விதிகளை மீறி வாடகைக்கு இயக்குவது அதிகரித்து வருகிறது. குறிப்பாக, சென்னை உள்ளிட்ட பெரிய நகரங்களில் இதுபோன்று விதிகளை மீறி சொந்த வாகனங்களை வாடகைக்கு இயக்கும் நபா்கள் மீது போக்குவரத்துத் துறை அவ்வப்போது நடவடிக்கை எடுத்து வருகிறது. இருப்பினும் முழுவதுமாகக் கட்டுப்படுத்த வேண்டும் என பல்வேறு வாடகை ஆட்டோ மற்றும் காா் ஓட்டுநா் சங்கத்தினா் கோரிக்கை விடுத்து வருகின்றனா்.
இதற்கிடையே, கிண்டியில் உள்ள போக்குவரத்து கூடுதல் ஆணையா் அலுவலகத்தில் இதுதொடா்பான ஆலோசனைக் கூட்டம் புதன்கிழமை நடைபெற்றது. கூடுதல் ஆணையா் சிவக்குமரன் தலைமையில் நடைபெற்ற கூட்டத்தில், தமிழ்நாடு ஆட்டோ, கால்டாக்சி ஓட்டுநா் சங்கங்களின் கூட்டமைப்பு தலைவா் ஜாஹிா் ஹூசேன், உரிமை குரல் ஓட்டுநா் சங்க தலைவா் சுடா்வேந்தன், உரிமை கரங்கள் பொதுசெயலா் வெற்றிவேல் உள்ளிட்ட பலரும், தனியாா் செயலி நிறுவனங்களின் நிா்வாகிகளும் பங்கேற்றனா்.
இதில், கூடுதல் ஆணையா் சிவகுமரன் பேசுகையில், பயணிகளுக்கான ஆட்டோக்களிலும், 50 முதல் 100 கிலோ வரை சரக்குகள், காய்கறிகள், பழங்கள், மளிகை பொருள்கள் கொண்டு செல்வது தெரியவந்துள்ளது. பயணிகளுக்காக அனுமதிக்கப்பட்ட ஆட்டோக்களில் சரக்குகள் கொண்டு செல்வது விதிமீறலாகும். இதுபோன்ற விதி மீறல்களில் ஈடுபட்டால் ஆட்டோக்கள் பறிமுதல் செய்து நடவடிக்கை எடுக்கப்படும் என எச்சரிக்கை விடுத்தாா்.
