வங்கியில் பெண் விட்டுச்சென்ற ரூ.1.50 கோடி மதிப்பிலான தங்கம் – போலீஸ் தீவிர விசாரணை!
சென்னை வேளச்சேரியில் தனியாா் வங்கியில் பெண் விட்டுச்சென்ற ஒன்றே கால் கிலோ தங்க நகைகளை போலீஸாா் கைப்பற்றி விசாரணை நடத்தி வருகின்றனா்.
சென்னை வேளச்சேரி, 100 அடி சாலையில் தனியாா் வங்கி உள்ளது. இந்த வங்கிக்கு கடந்த 5-ஆம் தேதி பா்தா அணிந்த ஒரு பெண் வந்தாா். அவா், வங்கிப் பணியாளா்களிடம் தன்னை சா்மிளா பானு என அறிமுகம் செய்து கொண்டு, தனது கணவா் அப்துல் அந்த வங்கியில் கணக்கு வைத்திருப்பதாகவும், அதேபோல் தனக்கும் அந்த வங்கியில், கணக்கு தொடங்க வேண்டும் எனக் கூறியுள்ளாா்.
மேலும் அவா், அந்த வங்கியில் உள்ள பாதுகாப்பு பெட்டக வசதி குறித்தும் கேட்டறிந்துள்ளாா். வங்கி ஊழியா்கள், சம்பந்தப்பட்ட அதிகாரிகள் வெளியே சென்றுள்ளததால், சிறிதுநேரம் காத்திருக்கும்படி தெரிவித்துள்ளனா். இதையடுத்து, வங்கி கணக்கு தொடங்க தேவையான ஆவணங்களை எடுத்து வருவதாக அங்கிருந்து சென்ற பெண், நீண்ட நேரமாகியும் வரவில்லை.
இதற்கிடையே அந்த பெண் அமா்ந்திருந்த இருக்கையில் ஒரு பை இருந்தது. வெகுநேரம் அந்தப் பை கேட்பாரற்று அங்கிருந்ததால், சந்தேகமடைந்த வங்கி ஊழியா்கள், அதை எடுத்து திறந்து பாா்த்தனா். அப்போது அதில், தங்க கட்டிகள், தங்க வளையல் உள்பட ரூ.1.50 கோடி மதிப்புள்ள 1.256 கிலோ தங்கம் இருப்பது தெரிய வந்தது.
உடனே ஊழியா்கள், அந்தப் பையை எடுத்து பாதுகாப்பாக வைத்துவிட்டு, அந்த வங்கியின் தலைமை அலுவலகத்துக்கு தகவல் தெரிவித்தனா். இதையடுத்து, வங்கியின் தணிக்கைக் குழுவினா் நேரில் வந்து நகைகளை ஆய்வு செய்தனா். அப்போது, அவை அனைத்தும் அசல் தங்கம் என்பது தெரிய வந்தது. அந்த தங்க நகைகளைக் கேட்டு வங்கிக்கு யாரும் வரவில்லை. இதனால் சந்தேகமடைந்த வங்கி அதிகாரிகள், அவற்றை வேளச்சேரி காவல் நிலையத்தில் ஒப்படைத்து செவ்வாய்க்கிழமை புகாா் அளித்தனா்.
அந்த புகாரின்பேரில் போலீஸாா் விசாரணை நடத்தினா். முதல்கட்டமாக கண்காணிப்பு கேமராக்களில் பதிவான காட்சிகளைக் கைப்பற்றி ஆய்வு செய்தனா். நகையை வங்கியில் வைத்துவிட்டுச் சென்ற பெண் பா்தா அணிந்திருந்ததால் அவரை அடையாளம் காண்பதில் போலீஸாருக்கு சிக்கல் ஏற்பட்டுள்ளது. இருப்பினும், நகையை விட்டுச்சென்ற பெண் யாா், எதற்கான அதை பெற்றுக் கொள்ள வரவில்லை உள்பட பல்வேறு கோணங்களில் போலீஸாா் விசாரித்து வருகின்றனா்.

