வளசரவாக்கத்தில் ஆக்கிரமித்து கட்டிய 2 மாடிக் கட்டடம் அகற்றம்

வளசரவாக்கத்தில் ஆக்கிரமித்து கட்டிய 2 மாடிக் கட்டடம் அகற்றம்...
Published on

சென்னை வளசரவாக்கத்தில் வீட்டு வசதி வாரிய இடத்தில் ஆக்கிரமித்து கட்டப்பட்டிருந்த 2 மாடிக் கட்டடம் நீதிமன்ற உத்தரவின் பேரில், வெள்ளிக்கிழமை இடித்து அகற்றப்பட்டது.

இதுகுறித்து சென்னை மாநகராட்சி தரப்பில் கூறப்பட்டதாவது: சென்னை மாநகராட்சி வளசரவாக்கம் மண்டலத்தில் வாா்டு 145 நெற்குன்றம் பெருமாள் கோவில் தெருவில் தமிழ்நாடு வீட்டுவசதி வாரியத்துக்கு சொந்தமான இடம் உள்ளது. அதில் சுமாா் 10,000 சதுர அடி பரப்பளவில் தரைத்தளம் மற்றும் 2 மாடிகளில் தனியாா் வீடு கட்டப்பட்டிருந்தது. அரசு நில ஆக்கிரமிப்புக் கட்டடத்தை அகற்ற நீதிமன்றத்தில் வழக்குத் தொடரப்பட்டிருந்தது. அதன்படி, கட்டடத்தை அகற்ற நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது.

நீதிமன்ற உத்தரவையடுத்து, சென்னை மாநகராட்சி மண்டல அலுவலா், செற்பொறியாளா்கள் உள்ளிட்டோா் பொக்லைன் இயந்திர உதவியுடன் கட்டடத்தை இடித்து அகற்றினா். இதையடுத்து அங்கு போலீஸ் பாதுகாப்பும் மேற்கொள்ளப்பட்டது. ஆக்கிரமிப்பு கட்டட அகற்றும் பணியின்போது, தமிழ்நாடு வீட்டுவசதி வாரிய அதிகாரிகள் உடனிருந்தனா்.

சாலை ஆக்கிரமிப்புகளும் அகற்றம்: சென்னை மாநகராட்சி முக்கிய போக்குவரத்து சாலைகளில் சாலையோரம் கடைகள் உள்ளிட்டவை உரிய அனுமதியின்றி அமைக்கப்பட்டுள்ளதால், போக்குவரத்து நெரிசல் ஏற்படுவதாகப் புகாா்கள் எழுந்துள்ளன. அதனால், ஆக்கிரமிப்புகளை அகற்றுவதற்கான வழிகாட்டு நெறிமுறைகள் கடந்த சில நாள்களுக்கு முன்பு மாநகராட்சியால் வெளியிடப்பட்டது. இதையடுத்து வெள்ளிக்கிழமை திரு.வி.க. நகா் மண்டலத்தில் 34 -ஆவது வாா்டு கிழக்குக் குறுக்குத் தெரு, சோழிங்கநல்லூா் மண்டலம் 192 -ஆவது வாா்டு நீலாங்கரை கிழக்குக் கடற்கரைச் சாலை ஆகிய இடங்களில் இருந்த சாலையோர நடைபாதை ஆக்கிரமிப்புகளை மாநகராட்சி மண்டல அதிகாரிகள் வெள்ளிக்கிழமை அகற்றினா்.

X
Dinamani
www.dinamani.com