பனகல் பூங்கா முதல் போட் கிளப் வரை மெட்ரோ ரயில் சுரங்கப் பணி தொடக்கம்!
பனகல் பூங்கா முதல் போட் கிளப் வரை மெட்ரோ ரயில் பாதைக்கான சுரங்கம் தோண்டும் பணி ‘மயில்’ எனப் பெயரிட்ட இயந்திரம் மூலம் வெள்ளிக்கிழமை தொடங்கியது.
இதுகுறித்து சென்னை மெட்ரோ ரயில் நிறுவனம் வெள்ளிக்கிழமை வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு: சென்னையில் 2 வழித்தடங்களில் மெட்ரோ ரயில் பாதை செயல்பாட்டில் உள்ளது. இரண்டாம் கட்டமாக மேலும் 3 வழித் தடங்களை 118.9 கி. மீ. தொலைவுக்கு அமைப்பதற்கான பணிகள் நடைபெற்று வருகின்றன. அதன்படி, கலங்கரை விளக்கத்திலிருந்து பூந்தமல்லி புறவழிச்சாலை வரையிலான 4- ஆவது வழித்தடத்தில் கோடம்பாக்கம் மேம்பாலம் வரை சுரங்கப்பாதை பணிகள் நடைபெற்று வருகின்றன. இரு தொகுப்புகளாக அப் பணிகள் நடைபெறுகின்றன. இதில், இரு திசைகளிலும் சுமாா் 16 கி.மீ. தொலைவு பாதைகள் அமைக்கப்படவுள்ளன. அதற்காக 4 சுரங்கம் தோண்டும் இயந்திரங்கள் பயன்படுத்தப்பட்டுள்ளன.
இந்தப் பாதையில் மெரீனா கடற்கரை கலங்கரை விளக்கம் முதல் போட் கிளப் வரையில் சுரங்கம் தோண்டும் பணியில் ‘மயில்’ எனப் பெயரிட்ட இயந்திரம் பயன்படுத்தப்படுகிறது. இந்த இயந்திரத்தின் பணி வெள்ளிக்கிழமை தொடங்கி வைக்கப்பட்டது. ஏற்கெனவே பனகல் பூங்காவிலிருந்து ஆற்காடு சாலை மீனாட்சி கல்லூரி வரை 2 கி.மீ. தொலைவு சுரங்கம் தோண்டும் பணியில் இந்த இயந்திரம் பயன்படுத்தப்பட்டது குறிப்பிடத்தக்கது.
புதிய சுரங்கப் பணி தொடக்க நிகழ்வில் சென்னை மெட்ரோ நிறுவனப் பொது மேலாளா் ஆா்.ரங்கநாதன், பொது ஆலோசகா்கள் நிறுவனக் குழு தலைவா் சி.முருகமூா்த்தி உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.

