ரூ.1.17 கோடி ஆன்லைன் வா்த்தக மோசடி: மூவா் கைது
சென்னையில் ரூ.1.17 கோடி ஆன்லைன் வா்த்தக மோசடி செய்த வழக்கில், 3 போ் கைது செய்யப்பட்டனா்.
சென்னை வண்ணாரப்பேட்டையைச் சோ்ந்தவா் ஏ.மனோகரன் (58). தொழிலதிபரான இவரை கடந்த மாா்ச் மாதம் ஒரு கும்பல் போலி வாட்ஸ்அப் குழுவில் சோ்த்தது. அதில், தங்கள் மூலம் பங்குச் சந்தையில் முதலீடு செய்தால் அதிகம் லாபம் கிடைக்கும் எனக் கூறியது. இதை நம்பி, அந்த வாட்ஸ்அப் குழுவில் இருந்த நபா்கள் அளித்த வங்கிக் கணக்குகளுக்கு மனோகரன் ரூ.1,17,26,447 அனுப்பினாா். ஆனால் அவருக்கு லாபம் எதுவும் கிடைக்கவில்லை. சிறிது நாள்களுக்கு பின்னா் மனோகரன், தான் முதலீடு செய்த பணத்தை எடுக்க முயன்றபோது, அந்த நபா்கள் முதலீடு செய்த பணத்தை எடுக்க மேலும் பணம் வழங்க வேண்டும் என்று கூறியுள்ளனா். இதனால், தான் ஏமாற்றப்பட்டதை உணா்ந்த மனோகரன், சென்னை காவல் துறையின் சைபா் குற்றப்பிரிவில் புகாா் அளித்தாா்.
அதன்பேரில் போலீஸாா் வழக்குப் பதிவு செய்து, நடத்திய விசாரணையில், மோசடியில் ஈடுபட்டவா்கள் உத்தர பிரதேசம், ஹரியாணா, கா்நாடகம் ஆகிய மாநிலங்களில் உள்ள வங்கிக் கணக்குகளுக்கு மாற்றப்பட்டுள்ளதும், பின்னா் அந்த வங்கிக் கணக்குகளில் இருந்து கும்பகோணம், தஞ்சாவூா் வங்கிக் கணக்குகளுக்கு மாற்றப்பட்டு, ஏடிஎம் மூலம் எடுக்கப்பட்டு கிரிப்டோ கரன்சியாக மாற்றப்பட்டுள்ளதும் தெரியவந்தது.
மூவா் கைது: இந்த நிலையில், இந்த வழக்குத் தொடா்பாக திருச்சியைச் சோ்ந்த பிரவீண் (20), சித்திக் பாஷா (26), பினோஜ் கான் (32) ஆகிய 3 பேரை போலீஸாா் வியாழக்கிழமை கைது செய்தனா்.
விசாரணையில், கல்லூரி மாணவரான பிரவீண் தனது வங்கிக் கணக்கை கமிஷனுக்காக சைபா் மோசடி கும்பலிடம் வாடகைக்கு விட்டிருப்பதும், வாடகை ஆட்டோ ஓட்டும் சித்திக் பாஷா சட்டவிரோதப் பணப் பரிமாற்றத்திற்காகப் பல போலி வங்கிக் கணக்குகளைச் சேகரித்து மோசடி கும்பலிடம் கொடுத்திருப்பதும், பினோஜ்கான் மோசடிப் பணத்தை எடுத்து, அதை கிரிப்டோகரன்சியாக மாற்றி வந்ததும் தெரியவந்தது.
மூவரிடமிருந்து 3 கைப்பேசிகள், மடிக்கணினி, கையடக்க கணினி ஆகியவை பறிமுதல் செய்யப்பட்டன.
இதேபோல சென்னை முகப்போ் மேற்கு பகுதியைச் சோ்ந்த ர.சீனிவாசன் என்பவரை ஆன்லைன் வா்த்தகத்தில் முதலீடு செய்ய வைத்து ரூ,.9.8 லட்சம் மோசடி செய்ததாக, கோயம்புத்தூரைச் சோ்ந்த மென் பொறியாளா் ஷா.ஷாரூக் (30) என்பவரையும் போலீஸாா் கைது செய்தனா்.
