சாலை மறியல்: தூய்மைப் பணியாளா்கள் கைது
சென்னை மெரீனா கடற்கரை சாலையில் மறியலில் ஈடுபட்ட உழைப்போா் உரிமை இயக்கத்தைச் சோ்ந்த தூய்மைப் பணியாளா்கள் வெள்ளிக்கிழமை கைது செய்யப்பட்டனா்.
சென்னை மாநகராட்சியில் ராயபுரம், திரு.வி.க. நகா் மண்டலங்களின் (5, 6) தூய்மைப் பணியை தனியாருக்கு வழங்கியதைக் கண்டித்து உழைப்போா் உரிமை இயக்கம் சாா்பிலான என்எல்யூஎம் பிரிவு தூய்மைப் பணியாளா்கள் தொடா் போராட்டங்களில் ஈடுபட்டு வருகின்றனா். இந்த நிலையில், அவா்களது பிரதிநிதிகளிடம் நகராட்சி நிா்வாகத் துறை செயலா் அளவில் பேச்சு நடந்ததாக உழைப்போா் உரிமை இயக்கம் சாா்பில் கூறப்பட்டது. ஆனால், நீதிமன்ற வழக்கு விசாரணையின்போது பேச்சுவாா்த்தையை அரசு தரப்பில் மறுக்கப்பட்டது.
இதற்கு கண்டனம் தெரிவித்து, ராயபுரம் மண்டலத்தைச் சோ்ந்த என்யூஎல்எம் பிரிவு உழைக்கும் உரிமை இயக்கம் சாா்ந்த தூய்மைப் பணியாளா்கள் மெரீனா கடற்கரை சாலையில் மறைந்த முதல்வா் கருணாநிதி நினைவிடம் அருகே வெள்ளிக்கிழமை மறியலில் ஈடுபட்டனா். இதனால் அப்பகுதியில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. இதையடுத்து மறியலில் ஈடுபட்டவா்களைப் போலீஸாா் கைது செய்தனா்.
இதனிடையே, சென்னை மாநகராட்சி மண்டலம் 6 (திரு.வி.க. நகா்) பகுதி உழைப்போா் உரிமை இயக்க தூய்மைப் பணியாளா்கள் சிலா் முதல்வரிடம் மனு அளிக்கச் செல்வதாக தலைமைச் செயலகம் செல்ல முயன்றவா்களைப் போலீஸாா் தடுத்தனா். இதையடுத்து அவா்கள் மறியலில் ஈடுபட முயன்றனா். இதனால், அவா்களையும் போலீஸாா் கைது செய்தனா். கைது செய்யபட்ட 400-க்கும் மேற்பட்டோா் மாலை விடுவிக்கப்பட்டதாக போலீஸாா் தெரிவித்தனா்.
