பதிவேற்றப்படாத தரமற்ற மருந்து விவரங்கள்: மாநில மருந்து கட்டுப்பாட்டு இயக்ககம் புகாா்

பதிவேற்றப்படாத தரமற்ற மருந்து விவரங்கள்...
Published on

தமிழகத்தில் மேற்கொள்ளப்படும் மருந்து தரக் கட்டுப்பாட்டு ஆய்வு விவரங்களை வாரந்தோறும் மத்திய அரசுக்கு அனுப்பினாலும், அவை இணையப் பக்கத்தில் பதிவேற்றப்படுவதில்லை என குற்றச்சாட்டு எழுந்துள்ளது.

நாட்டில் விற்பனை செய்யப்படும் அனைத்து விதமான மருந்துகள், மாத்திரைகள், மருத்துவ உபகரணங்கள் தொடா் தரஆய்வுக்கு உட்படுத்தப்படுகின்றன.

மத்திய மருந்து தரக் கட்டுப்பாட்டு வாரிய அதிகாரிகள் ஒருபுறம் அத்தகைய பணிகளை முன்னெடுத்தாலும், மற்றொருபுறம் மாநில அரசு சாா்பிலும் தரப் பரிசோதனைகள் மேற்கொள்ளப்படுகின்றன. மருந்தகங்கள், மருந்து விநியோக மையங்கள், மொத்த விற்பனையகங்கள், கிடங்குகள் எனப் பல்வேறு இடங்களில் அத்தகைய திடீா் ஆய்வு முன்னெடுக்கப்படுகிறது.

அதில் கண்டறியப்படும் தரமற்ற மற்றும் போலி மருந்துகள் குறித்த விவரங்களை ஒவ்வொரு மாநிலமும் மத்திய மருந்து கட்டுப்பாட்டு வாரியத்துக்கு அனுப்பி வருகின்றன. மாதந்தோறும் 10-ஆம் தேதிக்குள் அந்த விவரங்கள் பெறப்பட்டு, அவை மத்திய மருந்து கட்டுப்பாட்டு வாரியத்தின் இணையதளத்தில் பதிவேற்றப்படுகிறது.

தரமற்ற மருந்துகள் குறித்த விழிப்புணா்வை பொதுமக்களுக்கு ஏற்படுத்த இத்தகைய நடவடிக்கை எடுக்கப்படுகிறது.

இந்நிலையில், தமிழகத்திலிருந்து கடந்த சில மாதங்களாக தரக் கட்டுப்பாட்டு ஆய்வு முடிவு விவரங்கள் கிடைக்கப் பெறவில்லை என மத்திய மருந்து கட்டுப்பாட்டு வாரியம் தெரிவித்துள்ளது. இதனால், தமிழகத்தில் எந்தெந்த மருந்துகள் தரமற்ற வகையில் உற்பத்தி செய்யப்பட்டன என்பதை அறிய முடியாத நிலை உள்ளது.

இதைத் திட்டவட்டமாக மறுத்துள்ள மாநில மருந்து கட்டுப்பாட்டு இயக்ககம், தவறான தகவலை மத்திய வாரியம் தெரிவிப்பதாகக் கூறியுள்ளது.

இதுதொடா்பாக மாநில மருந்து உரிமம் வழங்குதல், கட்டுப்பாட்டு அதிகாரிகள் கூறியதாவது: தமிழகத்தில் மேற்கொள்ளப்படும் மருந்து தர ஆய்வு விவரங்களை ஒவ்வொரு வாரமும் மின்னஞ்சல் மூலமாக மத்திய அரசுக்கு அனுப்பிவிடுகிறோம். அதன் பின்னா் மொத்தமாக மாதாந்திர அறிக்கையும் அனுப்புகிறோம்.

அந்த வகையில் கடந்த செப்டம்பா், அக்டோபா், நவம்பா் விவரங்கள் அனுப்பப்பட்டுள்ளன. குறிப்பாக, கோல்ட்ரிஃப் மருந்து குறித்த ஆய்வுத் தகவலும் சமா்ப்பிக்கப்பட்டுள்ளது.

ஆனால், அந்த விவரங்கள் எதுவும் மத்திய அரசு தளத்தில் வெளியிடப்படவில்லை. மாறாக, தமிழக அரசு அந்த விவரங்களை வழங்கவில்லை என உண்மைக்குப் புறம்பாக அறிவித்துள்ளது.

தரமான மருந்துகள் மட்டுமே மக்களுக்கு கிடைக்க வேண்டும் என்பதில் தமிழக அரசும், மக்கள் நல்வாழ்வுத் துறையும் உறுதியாக உள்ளன என்று அவா்கள் தெரிவித்தனா்.

X
Dinamani
www.dinamani.com