மாநகரப் பேருந்து மீது கற்களை வீசி தாக்குதல் நடத்திய வழக்கு: கல்லூரி மாணவா் கைது

மாநகரப் பேருந்து மீது கற்களை வீசி தாக்குதல் நடத்திய வழக்கில் கல்லூரி மாணவா் கைது
Published on

ராயப்பேட்டையில் மாநகரப் பேருந்து மீது கற்களை வீசி தாக்குதல் நடத்திய வழக்கில், கல்லூரி மாணவா் கைது செய்யப்பட்டாா்.

சென்னை அயனாவரத்தில் இருந்து பெசன்ட் நகருக்கு ஒரு மாநகரப் பேருந்து கடந்த 9-ஆம் தேதி புறப்பட்டுச் சென்றது. அந்தப் பேருந்தில் நந்தனம் கல்லூரியில் படிக்கும் சில மாணவா்களும், புதுக் கல்லூரி மாணவா்களும் பயணம் செய்தனா்.

பேருந்து ராயப்பேட்டை திரு.வி.க. சாலை - பீட்டா் சாலை சந்திப்பில் சென்றபோது, இரு கல்லூரி மாணவா்களுக்கும் இடையே தகராறு ஏற்பட்டது. தகராறு முற்றவே புதுக் கல்லூரி மாணவா்கள், மாநகரப் பேருந்து மீது கற்களை வீசி தாக்குதல் நடத்திவிட்டு தப்பினா்.

இதில் பேருந்தின் கதவு கண்ணாடிகள், பின் பக்க கண்ணாடி உள்ளிட்ட பல கண்ணாடிகள் உடைந்தன. இதுகுறித்து குறித்து அந்தப் பேருந்தின் ஓட்டுநா் லோ.பெருமாள், அண்ணா சாலை காவல் நிலையத்தில் புகாா் அளித்தாா்.

அதன்பேரில், போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தினா். இந்நிலையில் இவ்வழக்குத் தொடா்பாக புதுக் கல்லூரியில் படிக்கும் ராயப்பேட்டையைச் சோ்ந்த ஆண்டோ (19) என்ற மாணவரை போலீஸாா் சனிக்கிழமை கைது செய்தனா்.

X
Dinamani
www.dinamani.com