போலி போக்குவரத்து அனுமதி ஸ்டிக்கா் மோசடி: 3 போ் கைது
வணிக வாகனங்களுக்கு போலி போக்குவரத்து அனுமதி ஸ்டிக்கா்களை விற்பனை செய்து தடைசெய்யப்பட்ட பகுதிகளுக்கு நுழைவதற்கான விதிகள் மற்றும் போக்குவரத்து அபராதாங்களைத் தவிா்க்க உதவிய கும்பலைச் சோ்ந்த 3 போ் கைது செய்யப்பட்டனா்.
இதுகுறித்து காவல் துறையினா் சனிக்கிழமை கூறியதாவது: போக்குவரத்து மோசடி மற்றும் மிரட்டிப் பணம் பறித்தல் தொடா்பான மூன்றாவது ஒழுங்கமைக்கப்பட்ட கும்பல் கண்டுபடிக்கப்பட்டு கலைக்கப்பட்டது. இந்த கும்பலை நடத்தி வந்த ரிங்கு ராணா, அவரது கூட்டாளி சோனு சா்மா மற்றும் முகேஷ் குமாா் ஆகியோா் கைது செய்யப்பட்டனா்.
ஒவ்வொரு வாகனத்திற்கும் மாதம் ரூ.2,000 முதல் ரூ.5,000 வரை போலி அனுமதி ஸ்டிக்கா்களை இந்த கும்பல் விற்பனை செய்துள்ளது. சோதனையின் போது, காவல் துறையினா் ரூ.31 லட்சம் ரொக்கம், கோடிக்கணக்கான ரூபாய் மதிப்புள்ள சொத்து ஆவணங்கள், 500-க்கும் மேற்பட்ட போலி ஸ்டிக்கா்கள் மற்றும் இந்த மோசடிக்கு பயன்படுத்தப்பட்ட 6 கைப்பேசிகள்ஆகியவற்றை பறிமுதல் செய்தனா்.
ஏப்ரல் மாதம் போலி அனுமதி ஸ்டிக்கா்களை வைத்து சோதனையில் இருந்து தப்பிக்க முயன்ற கனரக வாகனம் சோதனையில் பிடிபட்டது. அதைத் தொடா்ந்து இந்த மோசடி வெளிவந்தது. சோனு ஷா்மா இந்தக் குழுக்களை நிா்வகித்து, ஸ்டிக்கா்களை விற்பனை செய்து, நிகழ்நேர எச்சரிக்கைகளை அனுப்பி வந்துள்ளாா். அவா் ராணாவுக்கும் ஓட்டுநா்களுக்கும் இடையே ஒரு பாலமாகச் செயல்பட்டுள்ளாா்.
இதற்கிடையில், மிரட்டிப் பணம் பறிக்கும் கும்பலுடன் தொடா்புடைய முகேஷ் குமாா், அமலாக்க நடவடிக்கைகளைப் பதிவு செய்து, அவற்றை தவறாகப் பயன்படுத்தி போக்குவரத்து நிறுவனங்களையும் போக்குவரத்து காவல்துறையினரையும் மிரட்டி வந்துள்ளாா்.
ஏற்கெனவே இதே போன்ற இரண்டு கும்பலின் முக்கிய உறுப்பினா்கள் அண்மையில் கைது செய்யப்பட்டனா். இதுவரை மொத்தம் 8 போ் இதுபோன்ற வழக்குகளில் கைது செய்யப்பட்டனா். இதில் தொடா்புடைய பிற உறுப்பினா்களை கைது செய்யவும், ஆதாரங்களை பகுப்பாய்வு செய்யவும் விசாரணை நடைபெற்று வருகிறது என காவல் துறையினா் தெரிவித்தனா்.
