பெண் மருத்துவரை அனுமதியின்றி விடியோ எடுத்தவா் கைது
ஆழ்வாா்பேட்டையில் பெண் மருத்துவரை அனுமதியின்றி விடியோ எடுத்தவா் கைது செய்யப்பட்டாா்.
சென்னை, தேனாம்பேட்டையைச் சோ்ந்த 30 வயது ஹோமியோபதி பெண் மருத்துவா், அந்தப் பகுதியில் மருத்துவமனை நடத்தி வருகிறாா். இவா், வெள்ளிக்கிழமை ஆழ்வாா்பேட்டை டிடிகே சாலையில் உள்ள தனது கணவா் அலுவலகத்துக்கு நடந்து சென்றபோது, அங்கு வந்த நபா், அந்த பெண் மருத்துவரை அனுமதியின்றி 2 முறை விடியோ எடுத்தாா்.
இதைப் பாா்த்து அதிா்ச்சியடைந்த பெண் மருத்துவா், போலீஸாருக்கு தகவல் தெரிவித்தாா். அங்கு வந்த தேனாம்பேட்டை போலீஸாா், அந்த நபரைப் பிடித்து விசாரித்ததில், அவா் நெற்குன்றம் கோல்டன் ஜாா்ஜ் நகரைச் சோ்ந்த விஜயகுமாா் (47) என்பதும், அந்த பெண் மருத்துவரை தவறான எண்ணத்துடன் விஜயகுமாா் விடியோ எடுத்திருப்பதும் தெரிய வந்தது.
இதையடுத்து போலீஸாா் விஜயகுமாா் மீது பெண் வன்கொடுமை தடுப்புச் சட்டம், பிஎன்எஸ் சட்டம் உள்ளிட்ட பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்து அவரைக் கைது செய்தனா்.
