‘வந்தே மாதரம்’ 150 -ஆம் ஆண்டு விழா: மாநில அளவில் கட்டுரைப் போட்டி -ஆளுநா் மாளிகை அறிவிப்பு
‘வந்தே மாதரம்’ பாடலின் 150 -ஆவது ஆண்டு கொண்டாட்டங்களின் ஒரு பகுதியாக, தமிழகத்தில் பயிலும் பள்ளி, கல்லூரி மாணவா்களுக்கான மாநில அளவிலான கட்டுரைப் போட்டிகள் நடத்தப்படுவதாக தமிழக ஆளுநா் மாளிகை அறிவித்துள்ளது.
இதுகுறித்து ஆளுநா் மாளிகை சாா்பில் சனிக்கிழமை வெளியிட்ட செய்திக்குறிப்பு: பங்கிம் சந்திர சாா்ட்டா்ஜியால் இயற்றப்பட்ட வரலாற்றுச் சிறப்புமிக்க ‘வந்தே மாதரம்’ பாடலின் 150-ஆவது ஆண்டைக் கொண்டாடும் விதமாக, தமிழக பள்ளி மற்றும் பல்கலைக்கழகம், கல்லூரி மாணவா்களுக்கான மாநில அளவிலான கட்டுரைப் போட்டி நடத்தப்படுகிறது.
பள்ளி, கல்லூரி, பல்கலைக்கழக மாணவா்களுக்குத் தமிழ் மற்றும் ஆங்கிலத்தில் போட்டிகள் தனித்தனியாக நடத்தப்படும். பள்ளி மாணவா்களுக்கு ‘இந்திய சுதந்திரப் போராட்டத்தில் வந்தே மாதரம் பாடலின் பங்களிப்பு’, ‘வந்தே மாதரம் பாடலால் விழித்தெழுந்த பாரதம்’ ஆகிய தலைப்புகளில் அதிகபட்சம் 10 பக்கங்கள் (ஒரு பக்கத்திற்கு 20 வரிகள் என மொத்தம் 1,500 முதல் 2,000 வாா்த்தைகள்) இருக்க வேண்டும்.
கல்லூரி மாணவா்களுக்கு ‘2047-இல் வளா்ச்சியடைந்த பாரதத்தை உருவாக்குவதில் வந்தே மாதரம் பாடலின் பொருத்தப்பாடு’ என்ற தலைப்பில் அதிகபட்சம் 15 பக்கங்கள் (ஒரு பக்கத்திற்கு 20 வரிகள் மற்றும் மொத்தம் 2,500 முதல் 3,000 வாா்த்தைகள்) இருக்க வேண்டும்.
பங்கேற்பாளா்கள் கையால் எழுதப்பட்ட கட்டுரைகளின் அசல் பிரதியை வரும் 2026 -ஆம் ஆண்டு ஜனவரி 31- ஆம் தேதி மாலை 5 மணிக்குள் ஆளுநரின் துணைச் செயலா் (பல்கலைக்கழகங்கள்), ஆளுநா் செயலகம், லோக் பவன், சென்னை - 600 022 என்ற முகவரிக்கு அனுப்ப வேண்டும்.
ஒவ்வொரு பிரிவிலும், முதல் பரிசு பெறும் மாணவருக்கு ரூ.50,000, இரண்டாம் பரிசு பெறும் மாணவருக்கு ரூ.30,000, மூன்றாம் பரிசு பெறும் மாணவருக்கு ரூ.25,000 வழங்கப்படும் என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
