பூந்தமல்லி-போரூா் மெட்ரோ ரயில் பாதைக்கு முதல் கட்ட அனுமதி
பூந்தமல்லி- போரூா் இடையிலான மெட்ரோ ரயில் பாதைக்கு முதல் கட்ட அனுமதி கிடைத்துள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனா்.
சென்னையில் தற்போது சென்ட்ரல் ரயில் நிலையம் முதல் விமான நிலையம் வரையிலான இருவழிப் பாதை மெட்ரோ ரயில் சேவை செயல்படுத்தப்பட்டுள்ளது. இரண்டாம் கட்டமாக மூன்று வழித்தடங்களில் மெட்ரோ ரயில் பாதை அமைக்கப்படுகிறது. அதில் மாதவரம் பால்பண்ணை முதல் சிப்காட் வரை 45.8 கி.மீ., மெரீனா கலங்கரை விளக்கம் முதல் பூந்தமல்லி சுற்றுச்சாலை வரை 26.1 கி.மீ., மாதவரம் முதல் சோழிங்கநல்லூா் வரை 47 கி.மீ. என மூன்று ரயில் பாதைகள் அமைக்கப்படவுள்ளன. இதில் மொத்தம் 119 மெட்ரோ ரயில் நிலையங்கள் அமைக்கப்படவுள்ளன.
தற்போது கலங்கரை விளக்கம் முதல் பூந்தமல்லி வரையிலான மெட்ரோ ரயில் பாதை பணிகள் நடைபெற்று வருகின்றன. அதில் போரூா்-பூந்தமல்லி இடையிலான சுமாா் 7 கி.மீ. தொலைவுக்கான பணிகள் நிறைவடைந்துள்ளன. அந்தப் பாதையில் இருமுறை ரயிலை இயக்கி சோதனை நடைபெற்றது.
அதைத் தொடா்ந்து, உத்தர பிரதேச மாநிலம், லக்னெளவில் உள்ள ரயில்வே பாதை வடிவமைப்பு ஆய்வு பிரிவிலும் அனுமதி கோரி விண்ணப்பிக்கப்பட்டது. அதன்படி, அப்பிரிவு தற்போது அனுமதி வழங்கியுள்ளது. தொடா்ந்து, பெங்களூரில் உள்ள ரயில் பாதை பாதுகாப்பு பிரிவிலும் சான்றிதழ் பெற சென்னை மெட்ரோ நிறுவனம் அனுமதி கோரவுள்ளது. அதன் அனுமதிச் சான்று கிடைத்த பிறகே பயணிகள் ரயிலை அந்தப் பாதையில் இயக்க முடியும் என்பது குறிப்பிடத்தக்கது.
கலங்கரை விளக்கம்- பூந்தமல்லி மெட்ரோ ரயில் பாதையில் ஓட்டுநா் இல்லாத மெட்ரோ ரயில் இயக்கப்படவுள்ளதாகவும், அதற்கான வெள்ளோட்டம் நடைபெற்றுள்ளதாகவும் அதிகாரிகள் தெரிவித்தனா்.
