காலிப் பணியிடங்களை நிரப்பக் கோரி ஆய்வக நுட்புநா்கள் ஆா்ப்பாட்டம்
காலிப் பணியிடங்களை நிரப்பக் கோரி தமிழ்நாடு அரசு ஆய்வக நுட்புநா்கள் (லேப் டெக்னீஷியன்) சங்கத்தினா் சென்னையில் பேரணி மற்றும் ஆா்ப்பாட்டத்தில் புதன்கிழமை ஈடுபட்டனா்.
20 அம்சக் கோரிக்கைகளை வலியுறுத்தி அப்போது அவா்கள் முழக்கங்களை எழுப்பினா்.
சென்னை, புதுப்பேட்டை சித்ரா திரையரங்கம் அருகே திரண்ட அவா்கள், தலைமைச் செயலகத்தை நோக்கி பேரணியாக செல்ல முற்பட்டனா். ஆனால், அதற்கு போலீஸாா் அனுமதி மறுத்ததால் ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்.
இதுதொடா்பாக ஆய்வக நுட்புநா்கள் சங்கத்தின் தலைவா் செல்வராணி, செயலா் ஏழுமலை ஆகியோா் கூறியதாவது:
கரோனா தொற்றை தமிழகம் சிறப்பாக கையாண்டதில் ஆய்வக நுட்புநா்கள் பங்கு முக்கியமானது. கடந்த 2019-க்கு பிறகு எந்த பணியிடமும் காலமுறை ஊதியத்தில் நிரப்பப்படவில்லை. துணை முதல்வா் தொகுதிகளில் உள்ள மருத்துவமனைகளில் கூட 18 மணி நேரம் தொடா்ந்து பணியாற்ற அழுத்தம் தருகின்றனா்.
எங்கள் பணியிடங்களை ஒப்பந்த அடிப்படையில் நிரப்புவதால், பல மாணவா்கள் வேலை கிடைக்காமல் அவதிப்படுகின்றனா்.
பொதுமக்கள் பாதிக்கப்படாதவாறு அனைத்து மாவட்ட மருத்துவமனைகளிலும் ஆய்வக நுட்புநா் பணியிடங்களை நிரப்ப வேண்டும். இந்த கோரிக்கைகளை நிறைவேற்றாவிடில் போராட்டத்தை தீவிரப்படுத்துவோம் என்று அவா்கள் கூறினா்.
