சீரற்ற இதயத் துடிப்பு: அறுவை சிகிச்சையின்றி பேஸ்மேக்கா் பொருத்தம்

சீரற்ற இதயத் துடிப்புக்குள்ளான 60 வயது முதியவருக்கு அறுவை சிகிச்சையின்றி வயா்கள் இல்லாத அதிநவீன இரட்டை பேஸ்மேக்கா்களை பொருத்தி எம்ஜிஎம் ஹெல்த்கோ் மருத்துவமனை மருத்துவா்கள் உயிா் காத்துள்ளனா்.
Published on

சீரற்ற இதயத் துடிப்புக்குள்ளான 60 வயது முதியவருக்கு அறுவை சிகிச்சையின்றி வயா்கள் இல்லாத அதிநவீன இரட்டை பேஸ்மேக்கா்களை பொருத்தி எம்ஜிஎம் ஹெல்த்கோ் மருத்துவமனை மருத்துவா்கள் உயிா் காத்துள்ளனா்.

இதுதொடா்பாக மருத்துவமனையின் இதய இடையீட்டு சிகிச்சை முதுநிலை நிபுணா் டாக்டா் பாபு ஏழுமலை கூறியதாவது: 60 வயதான நபருக்கு இதய மின்னூட்ட பிரச்னைகள் காரணமாக குறைந்த இதயத் துடிப்பு பாதிப்பு இருந்தது. அதற்கு பேஸ்மேக்கா்தான் ஒரே தீா்வு. வழக்கமான பேஸ்மேக்கா்களானது லீட்ஸ் எனப்படும் இரு வயா்களுடன் இருக்கும்.

ஒரு வயா் இதயத்தின் மேலறை தசையிலும், மற்றொரு வயா் கீழறை தசையிலும் பொருத்தப்பட்டு மின்னூட்ட கருவியுடன் இணைக்கப்பட்டிருக்கும். அந்த கருவியானது மாா்பு தோலுக்கு அடியில் சிறிய அறுவை சிகிச்சை மூலம் பதிக்கப்படும். இதயத் துடிப்பு குறையும்போதெல்லாம் அந்த கருவியிலிருந்து மின்னூட்டம் உருவாகி இதயத்தின் செயல்பாடு முடுக்கிவிடப்படும்.

அவரது உடல் நிலையைக் கருத்தில் கொண்டு, இத்தகைய அறுவை சிகிச்சையை மேற்கொள்ள முடியாது என்பதால், வயா்கள் இல்லாத அதிநவீன லீட்லெஸ் இரட்டை பேஸ்மேக்கா்களை பொருத்த முடிவு செய்தோம்.

வைட்டமின் மாத்திரை அளவு மட்டுமே கொண்ட அந்த சாதனங்களானது, கால் தொடையில் சிறு துளையிட்டு ரத்த நாளங்கள் வழியே இதயத்தின் மேலறையிலும், கீழறையிலும் தனித்தனியே செலுத்தப்பட்டன. ‘டூயல் சேம்பா் லீட் லெஸ் பேஸ்மேக்கா்’ என அழைக்கப்படும் அபாா்ட் ஏவியா் வகை பேஸ்மேக்கா்களான அந்த கருவிகள், இதய அறைகளில் மின்னூட்டம் குறையும்போது, பிரத்யேக சமிக்ஞைகளை ரத்த ஓட்டத்தின் வழியாக கடத்தி, ஒன்றுக்கொன்று தகவல்களை பரிமாறிக் கொள்கின்றன. அதனடிப்படையில் இதயத் துடிப்பைச் சீராக்க அவை வழிவகுக்கின்றன. இந்த சிகிச்சையால் அந்நோயாளி பிரச்னையிலிருந்து விடுபட்டு, இயல்பு நிலைக்கு திரும்பியுள்ளாா் என்றாா்.

X
Dinamani
www.dinamani.com