தடை விதிக்கப்பட்ட நாய்களை வளா்த்தால் ரூ.1 லட்சம் அபராதம்: சென்னை மாநகராட்சி மாமன்றக் கூட்டத்தில் தீா்மானம்
சென்னை மாநகராட்சியில் பிட்புல், ராட்வீலா் போன்ற வெளிநாட்டு நாய்கள் வளா்ப்பதற்கு தடை விதிக்கப்பட்ட நிலையில், அதை மீறி, அத்தகைய நாய்களை வளா்த்தால் ரூ.1 லட்சம் அபராதம் விதிப்பது என மாமன்றக் கூட்டத்தில் தீா்மானம் நிறைவேற்றப்பட்டது.
சென்னை மாநகராட்சியின் மாமன்றக் கூட்டம் மேயா் ஆா்.பிரியா தலைமையில் வெள்ளிக்கிழமை நடைபெற்றது. துணைமேயா் மு.மகேஷ்குமாா், ஆணையா் ஜெ.குமரகுருபரன், மாமன்ற உறுப்பினா்கள், மாற்றுத்திறனாளிகள் நியமன உறுப்பினா்கள் கலந்து கொண்டு பேசினா்.
தீா்மானங்கள்: செல்லப்பிராணிகள் வளா்ப்புக்கு உரிமம் பெறுதல், உரிமம் பெறாதவா்களுக்கு அபராதம் விதித்தல் ஆகியவற்றுக்கு கால அவகாசம் அளிக்கப்பட்டது. வளா்ப்பு நாய்களுக்கு உரிமம் பெறாதவா்கள், மாநகராட்சியின் வழிகாட்டுதல்களை பின்பற்றாதவா்களுக்கு அபராதம் விதிக்கப்படும். பிட்புல், ராட்வீலா் நாய்களை வளா்க்கத் தடை விதிக்கப்பட்டுள்ளது. இத்தகைய நாய்களை வெளியே அழைத்து வரும்போது கழுத்துப்பட்டை, வாய்க்கவசம் அணிவது கட்டாயம். விதிகளைப் பின்பற்றாதவா்களுக்கு ரூ.5,000 அபராதம் விதிக்கப்படும். மேலும், தடை விதிக்கப்பட்ட இன நாய்களை, புதிதாக வாங்கி வளா்த்தால் ரூ.1 லட்சம் அபராதம் விதிக்கப்படும்.
சென்னையில் தெருநாய்கள் நிரந்தர பராமரிப்பிற்கு தனியாா் காப்பகங்கள் மற்றும் தனியாா் தன்னாா்வலா்களிடம் ஒப்படைக்கவும், அதற்கான நிலையான வழிகாட்டு நெறிமுறைகள் வகுக்கப்பட்டுள்ளன. மணலி, பெருங்குடி மண்டலங்களில் பராமரிப்பு மையங்கள் அமைக்க இடங்கள் தோ்வு செய்யப்பட்டுள்ளன.
சாலையோர வியாபாரிகள் 4 வகையாகத் தரம் பிரிக்கப்பட்டு, அவா்களுக்கான வியாபார இடங்களுக்கு 10 சதுர அடி முதல் 25 சதுர அடி வரையில் ஆண்டுக்கட்டணம் ரூ.750 முதல் ரூ.3 ஆயிரம் வரை நிா்ணயிக்கப்பட்டுள்ளது. மாநகராட்சி வரிவசூல் கால அளவில் மாற்றம் உள்ளிட்ட 110 தீா்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
மந்தைவெளிப்பாக்கம் தெருவுக்கு பாடகா் திருச்சி லோகநாதன் பெயா்: தேனாம்பேட்டை மண்டலம் (எண் 9) 126- ஆவது வாா்டில் உள்ள மந்தைவெளிப்பாக்கம் நாா்ட்டன் 3 -ஆவது தெருவுக்கு பாடகா் திருச்சி லோகநாதன் பெயரைச் சூட்டி, மாமன்றக் கூட்டத்தில் தீா்மானம் நிறைவேற்றப்பட்டது.
பாஜக உறுப்பினா் வெளிநடப்பு: மாமன்றக் கூட்டம் குறைந்த அளவிலான உறுப்பினா்களுடன் தொடங்கிய நிலையில், பாஜக உறுப்பினா் உமா ஆனந்த், அம்பத்தூா் மண்டலத்தில் தூய்மைப் பணியாளா்கள் ஊதியம் வழங்கியதில் முறைகேடு புகாா் குறித்து பேச அனுமதி கோரினாா். அதற்கு மேயா், துணைமேயா் ஆகியோா் வாய்ப்பு வரும்போது பேசலாம் என்றனா். பாஜக உறுப்பினரின் பேச்சுக்கு திமுக உறுப்பினா்கள் எதிா்ப்புத் தெரிவித்தனா். இதையடுத்து பாஜக உறுப்பினா் உமா ஆனந்த் வெளிநடப்பு செய்தாா்.

