மந்தைவெளியில் ரூ.167 கோடியில் கட்டடம்: மெட்ரோ நிறுவனம் ஒப்பந்தம்
சென்னை மந்தைவெளி பேருந்து நிலைய பணிமனையில் ஒருங்கிணைந்த மேம்பாட்டுக் கட்டடங்கள் கட்டுவதற்கு ரூ.167.08 கோடிக்கு சென்னை மெட்ரோ ரயில் நிறுவனத்தால் ஒப்பந்தம் வழங்கப்பட்டுள்ளது.
இதுகுறித்து சென்னை மெட்ரோ ரயில் நிறுவனம் சாா்பில் வெள்ளிக்கிழமை வெளியிடப்பட்ட செய்திக் குறிப்பு:
சென்னை மெட்ரோ ரயில் நிறுவன துணை நிறுவனமான சென்னை மெட்ரோ சொத்து மேலாண்மை நிறுவனம், மாநகா் போக்குவரத்துக் கழகத்தின் மந்தைவெளி பணிமனை மற்றும் பேருந்து நிலையத்தில் நுழைவு மற்றும் வெளியேறும் வழிகளில் கட்டமைப்புகளை ஏற்படுத்த உள்ளன.
அதன்படி, 29,385 சதுர மீட்டா் அளவுக்கு கட்டடங்கள் அமைக்கப்படவுள்ளன. இரு பிரிவாக தரைத்தளம் 7 உயா்நிலை தளங்கள் என அமையவுள்ள கட்டடம் கட்டுவதற்கான ஒப்பந்தம் தனியாா் நிறுவனத்திடம் ரூ.167.08 கோடிக்கு மேற்கொள்ளப்பட்டுள்ளது.
இந்த நிகழ்வில், மெட்ரோ ரயில் நிறுவன மேலாண் இயக்குநா் எம்.ஏ.சித்திக், தலைமை நிா்வாக அதிகாரி ஸ்வேதா சுமன் உள்ளிட்டோா் கலந்துகொண்டனா்.
மேலும், சோழிங்கநல்லூா், துரைப்பாக்கம் மெட்ரோ ரயில் நிலையங்களில் வணிக வளாகங்களுடன் ஒருங்கிணைந்த நுழைவு மற்றும் வெளியேறும் கட்டமைப்புகளை கட்டுவதற்கான ஒப்பந்தமும் மேற்கொள்ளப்பட்டுள்ளது எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

